ஜந்தர் மந்தர் பகுதி போராட்டத் தளங்களின் பட்டியலிலிருந்து நீக்கம்! – டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அறிவிப்பு
டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமான ஜந்தர் மந்தர் பகுதி, இனி அதிகாரப்பூர்வப் போராட்டத் தளங்களின் பட்டியலிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தற்காலிகக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட முந்தைய நிலைக்குழு உத்தரவு (Standing Order No. L&O/48/22) தற்போது பகுதியாக மாற்றியமைக்கப்பட்டு புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்லியில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்த ராம் லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் அமைந்துள்ள சிபிடி மைதானம் (CBD Ground) ஆகிய மூன்று புதிய இடங்கள் மட்டுமே தற்போது அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த மூன்று புதிய இடங்களில் போராட்டங்களை நடத்துவது தொடர்பான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) தனித்தனியாக வெளியிடப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
