’மண்டாடி’ திரைப்பட விமர்சனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகவைப்பட்டினம் என்ற கடல் கிராமத்தில் நடக்கும் பாய்மரப் படகுப் பந்தயத்தையும், அதில் பங்கேற்று வெற்றி பெறும் அந்த கிராமத்தின் அணியையும் தனது தொழிலுக்கான ஆதாயமாக பார்க்கும் சாட்டபுலி (சுஹாஸ்), உள்ளூர் இளைஞர்களை புறக்கணித்து விட்டு வெளியூர் வீரர்களை வைத்து போட்டியில் பங்கேற்பது மட்டும் இன்றி, அந்த அணியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதை எதிர்த்து, அந்த கிராமத்து இளைஞர்கள் புதிய அணி ஒன்றை உருவாக்கி போட்டியில் பங்கேற்க முயற்சிக்கும் போது, அவர்களை தனது பணம் மற்றும் செல்வாக்கினால் அடக்கி விடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும், புதிய அணியின் கேப்டன் மாரி, சாட்டபுலியின் மகன் மீது தாக்குதல் நடத்த, சாட்டபுலி மாரியை கொலை வெறியோடு துரத்துகிறார்.
சாட்டபுலி ஆட்களிடம் இருந்து தப்பிக்கும் மாரி, 20 வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு சென்று, சென்னையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் முத்துகாளியிடம் (சூரி) தஞ்சம் அடைகிறார். விசயம் அறிந்த காளி, மாரிக்கு அடைக்கலம் கொடுக்க, அங்கேயும் சாட்டபுலி ஆட்கள் மாரியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இதனால் மாரியை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்கிறார் காளி. முத்துக்காளியின் வருகை சாட்டபுலியின் பழைய பகையை மேலோங்க செய்வதோடு, மாரியை கொலை செய்தே தீருவேன் என்று சவால் விடுகிறார். அவருக்கு போட்டியாக காளியும் கையில் கத்தி எடுக்க, ஊர் பஞ்சாயத்து சமரசம் செய்து, இதற்கு தீர்வு காண இரு தரப்பையும் படகுப் பந்தயத்தில் பங்கேற்க அனுமதிப்பதோடு, வெற்றி பெறும் அணி தான், முகவைப்பட்டினத்தின் அதிகாரப்பூர்வ அணியாக கருதப்படும், தோல்வியடைந்த அணி இனி எந்த படகுப் பந்தயத்திலும் கலந்துக் கொள்ள கூடாது, என்ற நிபந்தனை விதிக்கிறது.
தன் ஊரை விட்டு சென்றதோடு, காதல், குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் இழந்து தனி ஆளாக எங்கேயோ முத்துகாளி வாழ வேண்டிய சுழலை உருவாக்கிய அதே படகுப் பந்தயத்தில் மீண்டும் களம் இறங்கி தான் இழந்ததை திரும்ப பெற முடிவு செய்கிறார். அதற்காக உள்ளூர் இளைஞர்கள் மூலம் அணி ஒன்றை உருவாக்குபவர், அவர்களுக்கு பயிற்சியளித்து போட்டியில் வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார். படகு பந்தயத்தில் வீழ்த்துவது மட்டும் இன்றி, இந்த உலகத்தை விட்டே முத்துகாளியை அனுப்பி வைக்க வேண்டும், என்ற முடிவில் இருக்கும் சாட்டபுலி, அதற்கான சதிவேலைகளை செய்ய தொடங்குகிறார். எதிரியின் சதியையும், இயற்கையின் சீற்றத்தையும் தாண்டி, முத்துகாளி போட்டியில் வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பது தான் ‘மண்டாடி’ படத்தின் கதை.
முத்துகாளி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூரி, சிறப்பான நடிப்போடு கடுமையான உழைப்பையும் கொடுத்திருக்கிறார். உடல்மொழி மற்றும் அளவான நடிப்பு மூலம் மாஸ் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தியுள்ள சூரி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் சிறப்பாக நடித்து படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார்.
வில்லனாக சாட்டபுலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் சுஹாஸின் ஃபர்பாமன்ஸ் மிரட்டல். இளமை மற்றும் அதன் பிறகான காலக்கட்டம் என இரண்டு காலக்கட்டங்களிலும் நடிப்பிலும், உடல் மொழியிலும் வேறுபாட்டை காண்பித்திருப்பவர் சூரிக்கு இணையான வேடத்தில் சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், பாலசரவணன், ரவீந்திர விஜய், மிதுன் ஜெய்சங்கர் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் மீனவ கிராம மக்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரது உழைப்பு திரையில் மிகப்பெரிய மாயாஜாலத்தை செய்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் மதிமாறன் புகழேந்தி மீனவர்களின் வாழ்வியலை புதிய கோணத்தில் கையாண்டிருப்பதோடு, இதுவரை திரையில் பார்த்திராத பாய்மரப் படகுப் பந்தயத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்திருப்பவர், முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை, சிறு தொய்வும் இன்றி திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி சீட் நுணியில் உட்கார்ந்து படம் பார்க்க வைத்திருக்கிறார்.
கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த கதை தான் என்றாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளை கையாண்ட விதம், பாய்மரப் படகுப் பந்தயத்தை காட்சிப்படுத்திய விதம் ஆகியவை மூலம் இந்த ‘மண்டாடி’ ரசிகர்களை பிரமிக்க வைத்து, புதிய திரை அனுபவத்தை கொடுக்கிறது.
