உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறுகளுக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார் தொடங்கியிருக்கும் வளர்சிதை மாற்ற கிளினிக்
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார் மருத்துவமனை, உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறுகளுக்காக மேம்பட்ட, முழுமையான சிறப்பு பல்நோக்கு சிகிச்சைத் திட்டத்துடன் (வளர்சிதை மாற்ற) மெட்டபாலிக் கிளினிக்-ஐ தொடங்கியிருக்கிறது. அதிக உடல் எடையுடன் தொடர்புடைய மருத்துவ சிக்கல்கள் மேலாண்மைக்கு சான்றாதார அடிப்படையிலான சிகிச்சைகளையும், வளர்சிதை மாற்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தி குணப்படுத்துவதற்கான ஆதரவையும் இத்திட்டம் வழங்குகிறது.
வெறும் உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, நீடித்து நிலைக்கும் பலன்களுக்கும் நீண்டகால வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் இது முன்னுரிமை அளிக்கிறது. ஆரம்பக்கட்ட நீரிழிவு, வகை 2 நீரிழிவு நோய், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), அதிக கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடு அளவுகள் போன்ற கொழுப்பு குறைபாடுகளுக்கும் இது சிகிச்சையின் மூலம் தீர்வளிக்கிறது. மூட்டு வலி, குறைந்த உடல் இயக்கம் மற்றும் மேலும் எடை கூடுதல் ஆகிய தொடர் சுழற்சியிலிருந்து நோயாளிகள் விடுபடவும் இது உதவுகிறது. முறையான எடைக் குறைப்பின் மூலம் தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கான ஒருங்கிணைந்த சிகிச்சையையும் வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.
மதுரவாயல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரேவந்த் சரண் P அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர் அடையார் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கல்பனா தாய் B, நாளமில்லா சுரப்பியியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மெகர்பிரசாத் Y. D. மற்றும் மருத்துவக் குழுவினர் மற்றும் இந்த புதிய கிளினிக்-ன் மருத்துவ நிபுணர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் சிறப்பம்சம் நாளமில்லா சுரப்பியியல் மருத்துவ நிபுணரின் தலைமையிலான சிகிச்சை அணுகுமுறையாகும். ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை முழுமையாகப் புரிந்து உடல் எடையைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இதய நோய்க்கான அபாயங்களை மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்க இதயவியல் நிபுணர்களும்; சுவாசப் பிரச்சனைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க நுரையீரல் நிபுணர்களும்; கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்க கல்லீரல் நிபுணர்களும் இத்திட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றனர். நோயாளிகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து ஆலோசனைகளை உணவு முறை நிபுணர்கள் வழங்குவார்கள். உடல் இயக்கம், உடற்பயிற்சிகளுக்கு இயன்முறை சிகிச்சை வல்லுநர்கள் தனிப்பட்ட சிகிச்சையின் மூலம் உதவுகின்றனர். கொழுப்பு, தசை அளவு உட்பட உடலின் அமைப்பை பகுப்பாய்வு செய்யும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால், துல்லியமான சிகிச்சைத் திட்டத்தை உருவாக்க முடிகிறது. தேவைக்கேற்ப மருத்துவ ரீதியாக ஜி.எல்.பி-1 (GLP-1) அடிப்படையிலான புதிய மருந்து சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
உடல் எடை குறைப்பு சிகிச்சையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட டாக்டர். மெகர்பிரசாத் Y. D. இத்திட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இவருடன் சிறப்பு மருத்துவர்களான டாக்டர். மனோகர் G. (இதயவியல்), டாக்டர். அம்மையப்பன் பழனிசாமி C. (நுரையீரல்), டாக்டர். கவிதா சம்பத்குமார் (கல்லீரல்) மற்றும் உணவு முறை நிபுணர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள் இணைந்து சிகிச்சை வழங்குகின்றனர்.
இது குறித்து டாக்டர். மெகர்பிரசாத் கூறுகையில், “அளவுக்கதிக உடல் எடை, அதிகரித்த இரத்த சர்க்கரை, இயல்புக்கு மாறான கொலஸ்ட்ரால் மற்றும் பி.சி.ஓ.எஸ் போன்ற பிரச்சனைகள் இப்போது பொதுவான பாதிப்புகளாக மாறி விட்டன. இவை பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் இளவயதினரையும் பாதிக்கின்றன. காலப்போக்கில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தை இவை அதிகரிக்கும். இவற்றை முன்கூட்டியே அடையாளம் கண்டு சிகிச்சையைத் தொடங்குவது அவசியம். எங்கள் அணுகுமுறை, உடல் பருமன் சவால்களை எதிர்கொள்ளவும், சீரான எடையைப் பராமரிக்கவும் தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களை உருவாக்க உதவுகிறது. அறுவைசிகிச்சை அவசியத்தை குறைத்து, மருத்துவ சிகிச்சை, தகுந்த மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நோயாளிகள் உடல் எடையைக் குறைக்கவும், அதை தொடர்ந்து பராமரிக்க உதவுவதுமே எங்களின் நோக்கமாகும்,” என்றார்.
இது குறித்து எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் குழும வியூக முயற்சிகளுக்கான துணைத் தலைவர் கண்காணிப்பாளர் திரு. வேணுகோபால் பட் “உடல் பருமனை குறைக்க சிறந்த சிகிச்சை என்பது வெறும் எடையைக் குறைப்பதோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கும் அடிப்படை வளர்சிதை மாற்ற காரணிகளுக்கும் தீர்வு காண வேண்டும். இந்த முழுமையான திட்டத்தின் மூலம், சான்றாதார அடிப்படையிலான சிகிச்சை பராமரிப்பை நாங்கள் இத்திட்டத்தின் மூலம் வழங்குகிறோம். வளர்சிதை மாற்ற நோய்கள் வராமல் தடுப்பதும், தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்து, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிறந்த நீண்டகால ஆரோக்கியத்தைப் பெற நோயாளிகளுக்கு உதவுவதும் எங்களின் முதன்மை குறிக்கோளாகும்,” என்று குறிப்பிட்டார்.
