மார்பகக் கட்டியை அகற்ற ‘வாக்குவம் அசிஸ்டட்’ உத்தியைப் பயன்படுத்தும் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்
புற்றுநோய்க்கான நவீன சிகிச்சையில் புகழ் பெற்றிருக்கும் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூடின் கிளினிக் – பி, சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணிபுரியும் 33 வயது பெண்ணுக்கு, ஒரே மார்பகத்தில் இருந்த இரண்டு தீங்கற்ற கட்டிகளை அகற்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது. மார்பகத்தின் இயற்கையான தோற்றம் மாறாமல் பாதுகாக்க, ஒரு கட்டிக்கு வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சையும், மற்றொரு கட்டிக்கு தழும்புகளை ஏற்படுத்தாத அதிநவீன ‘VAE’ முறையும் பயன்படுத்தப்பட்டது. முதல் அறுவை சிகிச்சையின் தழும்பு மிகச் சிறியதாக இருப்பதால் காலப்போக்கில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும்; அதே சமயம் இரண்டாவது VAE முறையில் பெரிய வெட்டுக்காயங்கள் ஏதுமில்லாததால் கண்ணுக்கு தெரிகிற எந்தவொரு தழும்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வலியோடு சேர்த்து அப்பெண்ணின் மார்பகத்தில் இருந்த கட்டியின் அளவும் வடிவமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது; இதன் காரணமாக எழுந்த அச்சமே அவரை மருத்துவ பரிசோதனையையும், சிகிச்சையையும் பெறுவதற்காக மருத்துவமனையை அணுகுமாறு தூண்டியது.
எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்-ன் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், அவருக்கு மார்பக ஃபைப்ரோஅடினோமா என்ற தீங்கற்ற கட்டிகள் ஒரே மார்பகத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒன்று மார்பக காம்புப் பகுதிக்கு அருகிலும், மற்றொன்று மார்பகத்தின் மையப் பகுதியிலும் அமைந்திருந்தது.
கட்டிகள் அமைந்திருந்த இடங்களின் காரணமாக, ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமான சிகிச்சை முறை தேவைப்பட்டது. காம்புப் பகுதிக்கு அருகில் இருந்த கட்டி வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதில் கட்டியோடு சேர்த்து சிறிதளவு மேல்புறத் தோலும் திசுக்களும் அகற்றப்பட வேண்டி இருந்தது. இந்த அறுவைசிகிச்சையின் காரணமாக உருவான சிறிய தழும்பு காலப்போக்கில் மறைந்துவிடக் கூடியது.
மார்பகத்தின் மையப்பகுதியில் இருந்த இரண்டாவது கட்டியை அகற்ற அல்ட்ராசவுண்டு வழிகாட்டுதலுடன் கூடிய VAE முறை பயன்படுத்தப்பட்டது. திறந்தநிலை அறுவை சிகிச்சை இல்லாமல், உறிஞ்சும் தொழில்நுட்பம் மூலம் இக்கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. இந்த நவீன உத்தியைப் பயன்படுத்தியதால் நோயாளிக்கு இரண்டாவது காயதழும்போ, தையலோ, மார்பகத்தின் வடிவ மாற்றமோ ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது.
இந்த அறுவைசிகிச்சையை செய்த மருத்துவக் குழுவிற்கு தலைமையேற்ற மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் கீர்த்தி கேத்தரின் கபீர் கூறுகையில், “இளம் பெண்களிடையே ஃபைப்ரோஅடினோமா கட்டிகள் ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்றுதான். சுமார் 55% முதல் 70% வரையிலான பெண்களுக்கு இத்தகைய கட்டிகள் உருவாகின்றன. இது புற்றுநோயாக மாறாது என்றாலும், தொடர்ந்து வளர்ந்து மார்பகத்தில் வலியையும், அசௌகரியத்தையும், உருமாற்றத்தையும் ஏற்படுத்தும். இந்த நோயாளிக்கு ஒரே மார்பகத்தில் இருந்த இரண்டு கட்டிகளுக்கும் தனித்தனியாக வேறுபட்ட சிகிச்சை முறைகள் தேவைப்பட்டன. ஒரு கட்டிக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சையை செய்த நாங்கள், மற்றொரு கட்டிக்கு காயதழும்புகளைத் தவிர்க்கும் VAE என்ற நவீன உத்தியைப் பயன்படுத்தினோம். சிகிச்சை நடைபெற்ற அதே நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், சில நாட்களிலேயே தனது வழக்கமான பணிகளைச் செய்வது சாத்தியமானது; இது இந்த சிகிச்சையின் வெற்றிகரமான பலனை சுட்டிக்காட்டுகிறது” என்றார்.
குறைந்த ஊடுருவலுள்ள இத்தகைய அறுவைசிகிச்சை முறை குறித்து அவர் மேலும் கூறுகையில், “இளம் பெண்களின் மார்பகக் கட்டிகளை அகற்றுவதில், குறிப்பாக அவர்களின் அழகியல் தோற்றத்தைப் பாதுகாப்பதில் VAE சிகிச்சை உத்தியை ஒரு சிறந்த வரம் என்றே கூற வேண்டும். இதில் அல்ட்ராசவுண்டு சோதனை மூலம் கட்டியிருக்கும் இடத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, சிறிய துளை வழியே பிரத்யேகக் கருவியை உட்செலுத்துவதன் வழியாக மார்பக கட்டியைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெற்றிட உறிஞ்சல் முறை மூலம் வெளியேற்றிவிடும். கட்டி முழுமையாக அகற்றப்படும் வரை இந்த செயல்முறை தொடரும். வழக்கமாக அறுவைசிகிச்சையில் ஏற்படும் பெரிய வெட்டுக்காயமோ, தையலோ இதில் இல்லையென்பதால், மார்பகத்தின் இயற்கையான தோற்றம் அப்படியே தக்கவைக்கப்படுகிறது,” என்று விளக்கினார்.
எம்ஜிஎம் புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவ புற்றுநோயியல் துறையின் மூத்த நிபுணருமான டாக்டர் M. A. ராஜா கூறுகையில், “நோயாளிகளுக்கு புதுமையான தொழில்நுட்பங்களின் உதவியோடு சிகிச்சையளிப்பதோடு, அவர்களின் கவலைகளுக்கு தீர்வு கண்டு அவர்கள் எதிர்பார்க்கும் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக இளம் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அவர்களின் உடல் தோற்றத்தையும் வாழ்க்கை தரத்தையும் பாதிப்பின்றி தக்கவைப்பது எமது சிகிச்சையின் மிக முக்கியப் பகுதியாகும். ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற சிறந்த சிகிச்சை முறையை எமது நிபுணர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நோயாளியைப் போலவே, சிறந்த முடிவுகளைப் பெற வழக்கமான மற்றும் அதிநவீன முறைகளை ஒருங்கிணைத்து நாங்கள் சிகிச்சை திட்டத்தை உருவாக்குகிறோம். நோயாளியின் நலனை மையப்படுத்தும் இந்த அணுகுமுறையானது, சிறந்த சிகிச்சைப் பலனை தருவதோடு மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது,” என்றார்.
