மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் பேச்சால் புதிய சர்ச்சை – அகில இந்திய பிராமண சங்கம் எச்சரிக்கை
மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது,”ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
