குழந்தைகளை தாக்கும் புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் – எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்கள்
கோவிட்-19 பெருந்தொற்று உருமாற்றமடைந்து வரும் நிலையில், ‘BA.3.2.2’ என்ற புதிய ஓமிக்ரான் வகை வைரஸ், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை மிக எளிதாகத் தாக்கும் பேராபத்தைக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தரும் புதிய மருத்துவ ஆய்வு எச்சரித்துள்ளது.
பயோஆர்கைவ் (bioRxiv) மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, பெருந்தொற்றின் ஆரம்பக்கால ‘ஆதி வைரஸ்’ (Ancestral strain) பாதிப்புக்கு உள்ளாகாத அல்லது அதற்கான ஆரம்பக்கால தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாத சிறு குழந்தைகளுக்கு, இந்த புதிய உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் (Immune imprinting) உடம்பில் சுத்தமாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒற்றை பி-செcell (Single-B cell) மரபணு சோதனையில், குழந்தைகளின் உடலில் இயற்கையாக உருவாகும் ‘வகுப்பு 1 மற்றும் 4’ (Class 1/4) ரத்த எதிர்ப்பு அணுக்களை இந்த BA.3.2.2 வைரஸ் முற்றிலும் ஏமாற்றி உடலுக்குள் ஊடுருவுவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில், முந்தைய ஆதி வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அல்லது எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக்கொண்ட பெரியவர்களின் உடலில் இருக்கும் ‘வகுப்பு 1’ (Class 1) எதிர்ப்பு அணுக்கள், இந்த புதிய வைரஸை மிக எளிதாக வீழ்த்திவிடுகின்றன; இதுவே இந்தத் தொற்று பெரியவர்களை விடக் குழந்தைகளை மட்டும் ஏன் குறிவைத்துத் தாக்குகிறது என்பதற்கான அறிவியல் காரணமாகும்.
ஆனால், இதில் இருக்கும் ஆகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த வைரஸ் தொடர்ந்து குழந்தைகளிடையே பரவிக்கொண்டே இருந்தால், அது மேலும் உருமாற்றமடைந்து (Secondary variants) பெரியவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடைக்கும் புதிய பேராற்றலைப் பெற்றுவிடக்கூடும்; அது ஒட்டுமொத்த உலகளாவிய பரவலுக்கு மீண்டும் வழிவகுத்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பழைய வைரஸ் பாதிப்பால் பெரியவர்களுக்குக் கிடைத்துள்ள நோய் எதிர்ப்புத் திறன், இந்த முற்றிலும் மாறுபட்ட புதிய வைரஸுக்கு எதிராக விசித்திரமான முறையில் பாதுகாப்பு தருவதை விளக்கும் இந்த ஆய்வு, வருங்காலத்தில் குழந்தைகளுக்கான சிறப்புத் தடுப்பூசி உத்திகளைத் திட்டமிடுவதற்கு மிக முக்கிய வழிகாட்டியாகக் கருதப்படுகிறது.
