நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து திருப்பதியில் பிளாஷ்டிக் பொருட்களுக்கு தடை!
திருப்பதியில் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது.
50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்க கோரி திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
இதை தொடர்ந்து நவம்பர் 1-ந்தேதி முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதிக்க உள்ளது.
இதுகுறித்து திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடினர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றை தவிர்க்க வேண்டும்.
திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர். திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளனர்.