இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை – ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி விளக்கம்
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் வன்முறைகளைப் பரப்புவதற்கான சதி திட்டமே இது. அந்த சதித்திட்டம், ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டு உள்ளது என்பதற்காக நான் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 22-ம் தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன். உடனடியாக நான் நாடு திரும்பினேன். திரும்பி வந்ததும், கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினேன். அப்போது, இது நம்முடைய தேசம் தொடர்பான விசயம். பயங்கரவாதத்திற்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினேன்.
பாகிஸ்தான் நாட்டின் தொலைதூர பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்திற்கு முழு அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டது. எந்த பகுதியில், எப்போது, எப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவமே முடிவு செய்தது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன. அந்நாட்டின் விமான தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் எந்த நாட்டு தலைவரும் தலையிடவில்லை.
மே 9-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் மைக் வின்ஸ் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தேன் என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று பதிலளித்துள்ளார்.
