Tamilசெய்திகள்

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் – டிடிவி தினகரன்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி டிடிவி தினகரனை சந்தித்து, ஆட்சியமைக்க ஆதரவு கோரியதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் அளித்த பேட்டி தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறியதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்துள்ளனர். அதிமுகவுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிடிவி தினகரன் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

என்னை சந்தித்ததை பன்னீர்செல்வம் மறுக்க மாட்டார். மறுக்க முடியாத அளவிற்கு ரகசியங்கள் உள்ளன. மேலும் கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார். அமைச்சர் தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வர் ஆக்க முயன்றனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமமுகவை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாக தூதுவிட்டதாக அமைச்சர் தங்கமணி கூறியதுபற்றி கேட்டதற்கு, நான் தூது விட்டதற்கான ஆதாரத்தை அமைச்சர் தங்கமணி வெளியிட தயாரா? என்று கேள்வி எழுப்பினார் டிடிவி தினகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *