பாரா ஆசிய விளையாட்டு – ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்தியா
2-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 3-வது முயற்சியில் 60.01 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார். இலங்கை வீரர் சமிந்தா சம்பத் ஹெட்டி (59.32 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ஈரான் வீரர் ஒமிதி அலி (58.97 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி கால் அளவில் குறைபாடு கொண்டவர் ஆவார்.
பதக்கம் வென்ற சந்தீப் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘பெரிய போட்டியில் உலக சாதனையுடன் முதல் பதக்கத்தை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புகழ் அனைத்தும் எனது பயிற்சியாளரையே சாரும். இந்த முறை போட்டிக்காக அதிக அளவில் தயாரானேன். வெளிநாட்டில் பயிற்சி மேற்கொண்டது எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது’ என்று தெரிவித்தார்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராஜூ ரக்ஷிதா 5 நிமிடம் 40.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ராஜூ ரக்ஷிதா குறைவான கண்பார்வை கொண்டவர் ஆவார்.
நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் 32.72 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெங்களூருவை சேர்ந்த ஜாதவ் சுபாஷ் நாராயண் 2 கைகளையும் பாதி இழந்தவர். நீச்சலுக்கு கை மிகவும் அவசியம் என்றாலும், அதனையும் சமாளித்து அவர் சாதித்து காட்டி இருக்கிறார். நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றது.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராதா வெங்கடேசும், ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை ரம்யா சண்முகமும் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. சீனா 35 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் இருக்கிறது.