தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு – சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் சந்தணக்குமார் (43). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்நினம் இரவு சந்தணக்குமாரின் வீட்டின் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் திடீரெனத் தங்களிடம் இருந்த பெட்ரோல் குண்டை, சந்தணக்குமாரின் வீட்டு வாசலில் வீசி எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில் பெட்ரோல் குண்டு பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், வீட்டின் தரைப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்தணக்குமார், உடனடியாக தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சேதமடைந்த பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சந்தணக்குமாரின் மகன் விஷ்வாவிற்கும், மீளவிட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முகிலன் (19) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த முகிலன், 17 வயதுடைய இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து, விஷ்வாவின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து முகிலன் (19) மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவர்கள் இருவரையும் தாளமுத்துநகர் காவல்துறையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
