சென்னை ஐஐடி-யில் மருத்துவப் பட்டப்பிடிப்புகளை வழங்க திட்டம் – இயக்குநர் பேராசிரியர் காமகோடி அறிவிப்பு
சுமார் 70 ஆண்டுகளாகப் பொறியியல் துறையில் முத்திரை பதித்து வரும் சென்னை ஐஐடி (IIT Madras), மருத்துவக் கல்வித் துறையிலும் தடம் பதிக்கும் வகையில் ‘ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்’ (School of Medical Sciences) என்ற புதிய பிரிவைத் தொடங்கி எம்பிபிஎஸ் (MBBS), எம்டி (MD) மற்றும் பிஹெச்டி (PhD) போன்ற மருத்துவப் பட்டப்படிப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை’ மூலம் பொறியியலையும் மருத்துவத்தையும் இணைக்கும் படிப்புகளை வழங்கி வரும் நிலையில், தற்சமயம் நேரடியாக நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவ வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, இந்தியாவிலேயே நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே வடிவமைக்கவும் உருவாக்கவும் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கமாகும். கற்பித்தல் மருத்துவமனை அமைத்தல் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அதிகாரப்பூர்வ அனுமதி பெறுதல் போன்ற விதிமுறைகளுக்குட்பட்டு இத்திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
