Tamilசெய்திகள்

மக்களிடம் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினி மட்டும் தான்! – பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகளை கட்டியுள்ளார். அது மட்டுமின்றி 2022-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாகத் தான் அவருக்கு விருது கிடைத்துள்ளது. அதனை இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார்.

பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கே: அரசு நெல் கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனரே?

: மோடி அரசு ஏற்படுத்தப்பட்டவுடன் உடனடியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள், விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், விளைந்த பின்னர் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீட்டு தொகை கொடுத்ததால் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வகையில் தமிழகம் தான் அதிக அளவில் இழப்பீட்டு தொகையை பெற்றுள்ளது. இது சிறப்பு அல்ல. இதுபோன்ற இழப்பு ஏற்படக்கூடாது.

கே: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தி.மு.க. போராடுகிறதே?

: இது ஒரு வேலையில்லாத வேலை. அவர்கள் என்ன வேண்டும் என கேட்டுள்ளார்களா? தி.மு.க., காங்கிரஸ் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டங்களை பற்றியும் பேசுவதற்கு அரு கதையில்லை. ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று கூறுகிறார்கள். உலக நாடுகள் அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. நம்மிடம் உள்ள பொருட்களை எடுக்காமல் அயல் நாட்டில் இருந்து வாங்கவேண்டும் என்றால் தி.மு.க., காங்கிரஸ் அந்நிய நாட்டின் கைக்கூலிகளாகவும், ஏஜெண்டுகளாகவும் செயல்படுகிறார்கள். மக்களை தேவையற்ற முறையில் அச்சுறுத்தி, ஒரு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது போன்ற தோற்றத்தை உருவாக்கி காட்டுவது, இதுபோன்ற கேவலமான அரசியலில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் விடுதலை பெறவேண்டும் என கருதுகிறேன்.

கே: நடிகர் விஜய், தான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாரே?

: அந்த பதவியில் இருந்து யாராவது நடிப்பார்களா?

கே: இதுபோன்ற கருத்துக்கள் அரசியல் தலைவர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்ற நிலை உள்ளதா? நான் முதல்வர் ஆவேன் என்றும், மக்கள் வரவேற்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். இது எப்படி உள்ளது?

: எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகவும், ஜெயலலிதா ஆகவும் முடியாது. இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினி மட்டும் தான்.

கே: பா.ஜ.க.வுக்கு எதிராக இரண்டாவது விடுதலை போராட்டம் நடத்துவதாக ராகுல்காந்தி அறிவித்து உள்ளாரே?

: அவருக்கு விடுதலை கிடைக்காது. இதுபோன்ற கற்பனையில்தான் அவர் போராட்டம் நடத்துவார்.

கே: நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறாரா?

: அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல மனிதர் என்ற எண்ணம் உள்ளது. அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என தெரியாது.

கே: பா.ஜ.க. ரஜினியை மட்டும் ஆதரிப்பது ஏன்?

: யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எந்த துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பலர் பத்திரிகை மற்றும் சினிமா துறையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஏதோ தமிழகம் புறம்போக்கு நிலம் போல் நாதியில்லாமல் கிடப்பது போன்று சிந்தனையுடன் உள்ளே வரக்கூடாது. இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், லஞ்சம் வாங்குபவர்கள் என்று குறிப்பிட்டு பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. அப்படி யாரும் இருந்தால் அவர்களை குறிப்பிட்டு காட்டவேண்டும். அவ்வாறு கூறினால் நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவிப்பேன். ரஜினி நல்ல மனிதர் என்ற உணர்வு மக்களுக்கு உள்ளது.

கே: ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை விவசாயிகள் எதிர்க்கும்போது, திரும்ப திரும்ப செயல்படுத்துவது ஏன்?

: விவசாயிகள் கடலிலா விவசாயம் செய்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு விவசாயிகளை எந்தெந்த மாநிலங்களில் எப்படி எப்படி ஹைட்ரோ கார்பன் எடுக்கிறார்கள் என்று சுற்றுப்பயணம் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும். பேஸ்புக், வாட்ஸ்அப்களில் பலர் சுய லாபத்திற்காக பதிவு செய்கிறார்கள். இவர்களில் ஒருவருக்காவது முகவரி உள்ளதா? தமிழகத்தை சீரழிக்க ஒரு மிகப்பெரிய கூட்டமே உள்ளது.

கே: இன்னும் 6 மாதங்கள் தான் உள்ளது. அடுத்த கட்சி எப்படி இருக்கும்? மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா?

: இன்று இருப்பதை விட அதிகப்படியான இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும். பா.ஜ.க. 350 பாராளுமன்ற உறுப்பினர்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் 400-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *