ராட்சசன்- திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சில சைக்கோ திரில்லர் படங்கள் வெற்றிப் பெற்றிருந்தாலும், பெரும்பாலான சைக்கோ திரில்லர் படங்களின் ரிசல்ட் தோல்விகளில் முடிந்திருக்கும் நிலையில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகியிருக்கும் சைக்கோ திரில்லர் படமான ‘ராட்சசன்’ திரைப்படத்தின் ரிசல்ட் எப்படி என்பதை பார்ப்போம்.
பள்ளி பெண்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட, அவற்றை செய்பவன் ஒரு சைக்கோ கொலையாளி என்பதை கண்டறியும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான விஷ்ணு விஷாலின், அக்கா மகளும் அதே சைக்கோ கொலையாளியால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். தனது பக்கத்தில் இருக்கும் தனது அக்கா மகளையே காப்பாற்ற முடியாத சூழலில் இருக்கும் விஷ்ணு விஷாலுக்கு அந்த சைக்கோ கொலையாளி யார்? என்பது குறித்து எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில், ஒரு பியானோ இசை ஒலி மட்டுமே தடயமாக கிடைக்க, அதை வைத்து அந்த சைக்கோ கொலையாளி யார்? என்பதை கண்டறிவதோடு அவன் ஏன் பள்ளி மாணவிகளை கொலை செய்கிறான், என்பதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்கும் விஷ்ணு விஷால், அந்த சைக்கோ கொலையாளியை பிடித்தாரா இல்லையா, என்பது தான் ‘ராட்சசன்’ படத்தின் கதை.
வெற்றிப் பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ சைக்கோ திரில்லர் படமாக இருந்தாலும் சரி, சமீபத்தில் வெளியாகி தோல்வியடைந்த ‘இமைக்கா நொடிகள்’ சைக்கோ திரில்லர் படமாக இருந்தாலும் சரி, சைக்கோ கொலையாளியின் பின்னணி கதை தான் படத்திற்கு ரொம்பவே முக்கியமானது. இதில் எந்த அளவுக்கு வித்தியாசத்தைக் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு ரசிகர்களை கவர முடியும் என்பது இயக்குநருக்கு தெரியாது போலிருக்கு, அதனால் தான், சைக்கோ கொலையாளியின் பின்னணியை எளிமையாக கையாண்டிருப்பவர், ஹீரோவின் பின்னணியில், சினிமா இயக்குநராக ஆசைப்படும் ஒருவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகி, தனது சினிமா அனுபவத்தின் மூலம் சைக்கோ கொலை வழக்கை விசாரிப்பது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்.
காவல் துறையை மூட்டாளாக்கி சினிமா துறையை அதிபுத்திசாலித்தனமாக சித்தரித்திருக்கும் இயக்குநர் ராம்குமார், திரைக்கதையையும் அதே புத்திசாலித்தனத்தோடு சித்தரித்திருந்தால் ‘ராட்சசன்’ ரசிக்கும்படி இருந்திருக்கும், ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார்.
விஷ்ணு விஷால், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். உருவத்தினாலும், நடிப்பாலும் காக்கிச் சட்டைக்கு கச்சிதமாக பொருந்துபவர், தனக்கு கொடுத்த வேலையை 200 சதவீதம் சிறப்பாக செய்திருக்கிறார்.
அமலா பால் தான் படத்தின் ஹீரோயின், என்பது சொன்னால் தான் தெரியும், படத்தைப் பார்த்தால் அவங்க ஹீரோயின் என்பது தெரியாது. ஆசிரியை வேடத்தில் நடித்து, சில காட்சிகளில் விஷ்ணு விஷாலுடன் பைக்கில் பயணிப்பதோடு அம்மணியின் வேடத்தை முடித்துக் கொள்கிறார்கள். சில இடங்களில் அவரும் படத்திற்கு தொடர்புடையவர் தான் என்பதை காட்டுவதற்காக, சில காட்சிகளை திணித்திருக்கிறார்கள்.
பொதுவாக, இதுபோன்ற சைக்கோ திரில்லர் படங்களில், ஹீரோவுக்கு இணையான வேடத்தில் வில்லன் கதாபாத்திரமும் பவர் புல்லாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் வில்லன் என்பவர் டம்மியாக இருப்பதோடு, கிளைமாக்ஸில் மட்டும் அவரது வில்லத்தனத்தை காட்டுவதற்காக இயக்குநர் சிறிது வாய்ப்பளித்திருந்தாலும், அவை காமெடியாகவே இருக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும், பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
படத்தில் ட்விட்ஸ் வைக்கிறேன் என்ற பெயரில் இயக்குநர் ராம்குமார், படத்தை ஜவ்வு மிட்டாய் போல இழு..இழு…என்று இழுத்து நம்மை சாவடிக்கிறார்.
படத்தின் ஆரம்பம் சற்று எதிர்ப்பார்புடன் தொடங்கினாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். அதுவும் போலீஸாரை முட்டாளாக்கும் விதத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தின் மிகப்பெரிய ஓட்டை. விஷ்ணு விஷால் போலீஸ், அவரது மாமாவும் போலீஸாக இருக்க, அவங்க வீட்டில் இருந்து கடத்தப்படும் பள்ளி மாணவி, அவங்க வீட்டு அருகே பிணமாக கிடக்கிறார். போலீஸ்காரர் வீட்டில் இருந்து அதுவும் ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸார் வீட்டு பெண் கடத்தப்பட்டதும், அந்த வீட்டுக்கு போலீஸ் காவல் போட மாட்டார்களா? அல்லது நகரத்தில் இப்படி தொடர்ந்து கடத்தல், கொலை சம்பவங்கள் நடந்தால் போலீஸ் ரோந்து வராதா அல்லது போலீஸ் சாலைகளில் சோதனை செய்ய மட்டார்களா? இப்படி எந்த ஒரு காட்சியையும் படத்தில் வைக்காத இயக்குநர் சைக்கோ கொலையாளி யார்? என்பதை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தவுடனேயே, ஒரு சோதனை சாவடிக் காட்சியை வைத்திருப்பதோடு, அங்கிருந்து கொலையாளி எஸ்கேப் ஆவது, பிறகு விஷ்ணு விஷாலின் குழந்தையை கடத்துவது, அதை மீட்க விஷ்ணு விஷால் போராடுவது, என்று அதிகரித்துக் கொண்டே போகும் படத்தின் நீளத்தினால் ரசிகர்கள் கடுப்பாகி விடுகிறார்கள்.
மொத்தத்தில், சைக்கோவால் கொலை செய்யப்படுபவர்கள் அனுபவிக்கும் வலியை விட, படம் பார்ப்பவர்கள் தான் அதிகமான வலியை அனுபவிக்கிறார்கள். அதனால், இந்த ‘ராட்சசனை’ பார்க்க விரும்புகிறவர்கள் கையில், இரண்டு தலைவலி மாத்திரையை எடுத்துச் செல்வது நல்லது.
-ஜெ.சுகுமார்