Tamilசெய்திகள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மோப்ப நாய்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பாதுகாப்புப் படையினர்!

மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தங்களின் ‘கே9’ (K9) மோப்ப நாய் படைப்பிரிவைச் சேர்ந்த ‘புரூனோ’ (Bruno) மற்றும் ‘மேக்ஸ்’ (Max) ஆகிய இரு நாய்களின் பிறந்தநாளைக் கேக் வெட்டி, தொப்பிகள் அணிவித்து மிகவும் நெகிழ்ச்சியாகவும் கோலாகலமாகவும் கொண்டாடியுள்ளனர்.

விமான நிலையப் பாதுகாப்பில் வெடிகுண்டுகளைக் கண்டறிவது, சந்தேகத்திற்குரிய பொருட்களை மோப்பம் பிடிப்பது எனத் தங்களின் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக உழைக்கும் இந்தச் செல்லப் பிராணிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஒன்றிணைந்து இந்தப் பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வண்ணமயமான பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த விழாவில், இரண்டு மோப்ப நாய்களுக்கும் அழகான பிறந்தநாள் தொப்பிகள் அணிவிக்கப்பட்டு, அவற்றின் முன்னிலையில் அதிகாரிகள் கேக் வெட்டியதோடு, அவற்றுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளையும் ஊட்டி மகிழ்ந்தனர்.

நாட்டின் பாதுகாப்பில் தங்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்றும் இந்த வாயில்லா ஜீவன்களைத் வெறும் விலங்காகப் பார்க்காமல், தங்களின் குடும்ப உறுப்பினர்களைப் போலக் கருதி CISF வீரர்கள் நடத்திய இந்த அன்புப் பாசப் போராட்டம், பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைப்பதோடு சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்களின் பாராட்டுகளை அள்ளி ‘கியூட் முமென்ட்’ ஆக வலம் வருகிறது.