டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் ’சீதக்காதி’
96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி இருக்கிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.