மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி – இந்தியன் வங்கி சாம்பியன்
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து அணி சார்பில் 14-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்தியன் வங்கி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் 95-61 என்ற புள்ளி கணக்கில் சுங்க இலாகா அணியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணியில் முயின் பெய்க் 29 புள்ளியும், ஹரி ராம் 21 புள்ளியும் சுங்க இலாகா அணியில் சந்தோஷ் 13 புள்ளியும், ஐஷன் 10 புள்ளியும் எடுத்தனர்.
சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு ரூ.30 ஆயிரத்துடன் ராகன் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சுங்க இலாகாவுக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு சிறப்பு போலீசுக்கும் ரூ.10 ஆயிரமும், 4-வது இடத்தை பிடித்த அரைஸ் ஸ்டீல் அணிக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் அரைஸ் ஸ்டீல் சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடத்தை பிடித்த ரைசிங் ஸ்டார் அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.