ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் – ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 22 நாடுகளின் தலைவர்கள்
ஈரான் மற்றும் இஸ்ரே, அமெரிக்கா இடையிலான போரினால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய், எல்.பி.ஜி கேஸ் ஆகியவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த போக்கு நீடித்தால், இறக்குமதியை நம்பியிருக்கும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் உணவு தட்டுப்பாடு பிரச்சனையை சந்திக்க நேரும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் இணைந்து, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் ஈரானுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வளைகுடா பகுதியில் ஆயுதம் ஏந்தாத வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய், எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களையும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் படைகள் தற்காலிகமாக மூடியுள்ளதையும் இந்த நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
அதிகரித்து வரும் இந்தப் போர் பதற்றம் ஆழ்ந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், கடல் கண்ணிவெடிகளை இடுதல், ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அச்சுறுத்தல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தைத் தடுக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2817-க்கு (UN Security Council Resolution 2817) ஈரான் கட்டுப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
