November 17, 2026
Latest:
Tamilசினிமா

நட்சத்திரப் போட்டியாளர்கள் நடுவர்களாகப் பரிணாமம் எடுக்கும் ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’

அபாரமான இசைத் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவித்த 20 ஆண்டுகால சாதனையைக் கொண்டாடும் வகையில், தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’ நிகழ்ச்சியின் பிரம்மாண்ட அறிமுக ப்ரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக, முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் வலம் வந்தவர்கள், இன்று நடுவர்களாக அதே மேடையில் மீண்டும் சங்கமிக்கின்றனர். இன்று திரையிசை உலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களாக உயர்ந்துள்ள இவர்கள், அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைப் பட்டைதீட்ட ஒன்றிணைந்துள்ளனர்.

ஏழு ஆண் பாடகர்கள், ஏழு பெண் பாடகர்கள் என 14 நட்சத்திர நடுவர்களுடன், ‘சூப்பர் சிங்கர்’ பயணத்தில் உருவான கலைஞர்களைக் கொண்டாடும் வகையில் இந்தப் புதிய சீசன் அமைந்துள்ளது. ஆண் நடுவர்களாக சத்ய பிரகாஷ், நிவாஸ், திவாகர், பிரவீன் சைவி, ஆர்.கே. ஆதித்யா, செந்தில் மற்றும் சந்தோஷ் ஹரிஹரன் பங்கேற்கின்றனர். இவர்களுடன் புண்யா, பிரியங்கா, ரக்ஷிதா, நித்யஸ்ரீ, ரோஷினி, ராஜலட்சுமி மற்றும் சிவாங்கி ஆகிய ஏழு முன்னணிப் பாடகிகளும் நடுவர்களாக இணைகின்றனர். இவர்களின் இசை அனுபவமும், திரையிசைப் பயணமும், தனித்துவமான அணுகுமுறையும் ஒன்றிணைவதால், 20 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி உருவாக்கிய திறமைகளைப் போற்றும் ஒரு திருவிழாவாக இந்த சீசன் உருவெடுத்துள்ளது.

உற்சாகத்தை இரட்டிப்பாக்கும் விதமாக, ‘சூப்பர் சிங்கர்’ மேடையைப் பிரம்மாண்டமான கான்சர்ட் அரங்கமாக மாற்றும் புதிய செட் வடிவமைப்பு சீசன் 12-ல் அறிமுகமாகிறது. ஒரு நேரடி இசை நிகழ்ச்சியின் உற்சாகத்தையும் பிரம்மாண்டத்தையும் கண்முன் நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மேடையில், பாடகர்களுக்கு மிக அருகில் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில் பிரத்யேக ‘ஃபேன் பிட்’ (Fan Pit) பகுதியும் இடம்பெற்றுள்ளது. பிரமிக்க வைக்கும் இந்த கான்சர்ட் பாணி அரங்க அமைப்பால், சிலிர்க்க வைக்கும் பாடல்கள், ஆரவாரமான ரசிகர்கள் என இசையைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடும் ஒரு நேரடி இசைக்கச்சேரி அனுபவத்தை ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் தரும் என்பது உறுதி.

புதிய தொகுப்பாளராக ஸ்ருதிகா களமிறங்கும் ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’ நிகழ்ச்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சியுடன் பயணித்து வரும், அனைவராலும் விரும்பப்படும் மா.கா.பா ஆனந்தும் அவருடன் இணைந்து மேடையைப் பகிர்ந்து கொள்கிறார். இவரது வழக்கமான கலகலப்பான பேச்சும் நகைச்சுவையும் புதிய சீசனுக்குப் பலம் சேர்க்கும்.

கடந்த 20 ஆண்டுகளாக, 100-க்கும் மேற்பட்ட பாடகர்களை உலகிற்கு அறிமுகம் செய்து, இசைத் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்கும் மிக முக்கியமான மேடையாக ‘சூப்பர் சிங்கர்’ திகழ்கிறது. இதன் பல முன்னாள் போட்டியாளர்கள் திரையிசை மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் முன்னணிப் பாடகர்களாக ஜொலித்து வருவது, தமிழ் இசை மற்றும் பொழுதுபோக்கு உலகில் இந்த நிகழ்ச்சியின் தாக்கத்தை உணர்த்துகிறது.

‘நியூ ஏஜ்’ தீம் அடிப்படையிலான இந்த 12-வது சீசன், நிகழ்ச்சியின் பொன்னான பாரம்பரியத்தையும் புத்தம் புதிய குரல்களையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது. பழைய போட்டியாளர்கள் நடுவர்களாக கம்பீரமாகத் திரும்புகின்ற அதேவேளையில், புதிய தலைமுறைப் பாடகர்கள் மேடையை அதகளப்படுத்தத் தயாராகி வருகின்றனர். கடந்த கால நினைவுகளைப் போற்றுவதோடு, எதிர்கால இசை உலகிற்குப் புதிய வித்துக்களைப் போடும் ஒரு அசத்தலான இசை விருந்தாக இந்த சீசன் அமையும்.

‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’ நவம்பர் 21-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை, ஜியோஹாட்ஸ்டாரிலும் நீங்கள் ரசிக்கலாம்.