உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு துரோகிகளுக்கு சரியான பாடம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதியரசர் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து உருவாக்கி தந்த இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு இது சரியான பாடம்.
ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். இந்த தீர்ப்பில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம் என டி.டி.வி. தினகரன் சொன்னதாக சொல்கிறீர்கள். இதுவா? அனுபவம், அப்படியென்றால் நிறைய அனுபவம் அவருக்கு காத்திருக்கிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாங்களாகவே தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தால் இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள்.
நீதிமன்றம் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று கூறியுள்ளது. மீண்டும் தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா சொன்னது போல் இன்னும் 100 ஆண்டுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்.
கரூரில் ஒரு நபர் (முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி) இரண்டு அமாவாசைக்கு தான் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என அவ்வப்போது கூறி வருகிறார். மாதா மாதம் அமாவாசைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் பல அமாவாசைகளை அவர் பார்க்க தான் போகிறார். எங்கள் இல்லத்திருமண விழாவில் தனியார் பள்ளி பேருந்துகளும் அரசு பஸ்சும் இயக்கப்பட்டதாக கூறுகின்றனர். அரசு விதியின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.