Tamilசெய்திகள்

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்! – விசாரணையை தொடங்கிய உச்ச நீதிமன்றம்

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது கவர்னர்-ஜனாதிபதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயம் செய்தது.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், மாநில சட்டசபை அனுப்பும் மசோதாக்கள் தொடர்பாக 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும். கவர்னர்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் பி.எஸ்.நரசிம்மா, சூர்யகாந்த், விக்ரம்நாத், ஏ.எஸ். சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வருகிறது. இவ்வழக்கில் கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு வந்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு வழக்கை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு வழக்கை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா அரசுகள் பதில் மனுதாக்கல் செய்தன.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் கால அட்ட வணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.

ஜனாதிபதி விளக்கம் கோரிய இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19-ந் தேதி தொடங்கும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தாக்கல் செய்த ஆரம்ப ஆட்சேபனைகள் முதலில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் பரிந்துரையை ஆதரிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மனுக்கள் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் பரிந்துரையை எதிர்க்கும் மனுக்கள் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 2, 3, 9 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஏதேனும் மறு சமர்ப்பிப்புகள் இருந்தால், செப்டம்பர் 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.