X

”கடன் பெற்று இந்த ஆட்சி நடத்தப்படுகிறது” – சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் காரசார பேச்சு

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை மிகுந்த காரசாரமாக அமைந்தது.

தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெறவில்லை என்றும், 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் தவெகவிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முதல்வர் தனது வெற்றி மீது நம்பிக்கையின்றி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதுடன், ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பின் அந்த மக்களுக்கு முறையான நன்றிகூடத் தெரிவிக்கவில்லை என்று விமர்சித்தார்.

கொள்கை எதிரி என்று சொல்லும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரை அவரது தலைவருக்கே தெரியாமல் ஆதரவு அளிக்க வைத்திருப்பதாகவும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை இரண்டாகப் பிளந்து ஒரு தரப்பின் ஆதரவை முதல்வர் பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அதிமுகவில் இருந்து சோபாவுடன் புதிய முதல்வர் வீட்டிற்குச் செல்லும் காட்சிகள் ‘புஷ்பா’ படப் பாணியில் அமைந்துள்ளதாகக் கேலி செய்த அவர், ஊழல் சக்திகள் என்று விமர்சித்தவர்களையே இப்போது அமைச்சர் பதவிக்காகச் சந்தித்துப் பேசி வருவதாகச் சாடினார்.

“கூவத்தூரையே மிஞ்சும் அளவிற்கு எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து, அவர்களைக் கடன் பெற்று இந்த ஆட்சி நடத்தப்படுகிறது” என்று சாடிய உதயநிதி ஸ்டாலின், இந்த ஆட்சி மக்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தனது கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.