திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டுக்காரர்கள் கைது
பனியன் நகரமான திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி பனியன் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி எஸ். பெரியபாளையம் பெருமாள் கார்டன் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் ஊத்துக்குளி பெருமாள் கார்டன் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு ஏராளமான நைஜீரியர்கள் தங்கி இருந்தனர். அவர்களிடம் ஆவணங்களை சரி பார்த்த போது 9 பேர் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்சிங்கு (30), பிஸ்வா (45), சினேடு (30), இகோ பிகுவோ (32), டேய் (37), மற்றொரு சினேடு (34), விண்சென்ட் (28) தீபன் (35), ஜூகுமேகா (40). ஆவார்கள்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் எந்த வித ஆவணங்களும் இன்றி தங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த நுவான்க்பே(32), நிக்கோலஸ் உச்சேனா (38), ஓனாஜிட் (31), நெல்சன் மேக்போ (32), நுவோனு ஒக்வுதி (34) டாய் நெபின்சி (35) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரியர்கள் 6 பேரையும் தண்டனை காலம் முடிந்ததால் சிறை நிர்வாகம் விடுதலை செய்தது.
வெளியே வந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி கைதான வெளிநாட்டினர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் திருச்சியில் உள்ள முகாமில் அடைக்கப்பட வேண்டும்.
பின்னர் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற்று அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் நைஜீரியர்கள் விவகாரத்தில் போலீசார் முன்னெச்சரிக்கையாக இல்லாததால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.