Tamilசெய்திகள்

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், சென்னை செங்கல்பட்டு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டுத் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பாகக் கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான சிறப்புப் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் அக்டோபர் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.00 மணி வரையிலும், மீண்டும் அக்டோபர் 20, 2026 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் அக்டோபர் 21, 2026 அன்று நண்பகல் 12.00 மணி வரையிலும் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரங்களின்படி, செங்குன்றத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் வெளிவட்டச் சாலையில் மாதா பொறியியல் கல்லூரி சர்வீஸ் சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாகவும், மண்ணிவாக்கம் சர்வீஸ் சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு படப்பை வழியாகவும் செல்ல வேண்டும்; மாதவரத்தில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாகக் கிளாம்பாக்கம் நோக்கி வரும் வாகனங்கள் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை – பூந்தமல்லி சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாகவும், மதுரவாயல் ஆம்புலன்ஸ் பாயிண்டில் திருப்பிவிடப்பட்டு மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாகவும் (பூந்தமல்லி பைபாஸ் சாலை) செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜிஎஸ்டி சாலை வழியாகச் செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் வாகனங்கள் வண்டலூர் பழைய மேம்பாலம் அருகே திருப்பிவிடப்பட்டு வெளிவட்டச் சாலை வழியாகவும், வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை வழியாகக் கிளாம்பாக்கம் நோக்கி வரும் வாகனங்கள் கேளம்பாக்கம் சந்திப்பு மற்றும் செங்கண்மால் ரவுண்டானா பகுதிகளில் திருப்பிவிடப்பட்டுத் திருப்போரூர் – செங்கல்பட்டு சாலை வழியாகவும் செல்ல வேண்டும்.

செங்கல்பட்டில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக வரும் வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலம் அருகே திருப்பிவிடப்பட்டு ஒரகடம் – ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாகச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; எனவே, வாகன ஓட்டிகள் தங்களது இலக்கை அடைய ஓஎம்ஆர் (OMR) மற்றும் இசிஆர் (ECR) சாலைகளைப் பயன்படுத்துமாறும், தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.