Tamilசெய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபை சமீபத்தில் வழங்கியது. ஆறு நாள் பயணமாக செர்ஜியோ கோர் நேற்று இந்தியா வந்தார். மாலையில் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினர்.

செர்ஜியோ கோருடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, கோரின் பதவிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் மேலும் வலுப்படும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், செர்ஜியோ கோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா மதிக்கிறது. அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வரும் நாட்களில் வலுவடையும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார். தற்போது கூட இரு தலைவர்களும் போனில் மிகச் சிறந்த உரையாடலை நிகழ்த்தினர். இது வருகிற நாட்கள் மற்றும் மாதங்களில் தொடரும் என தெரிவித்தார்.