Tamilசெய்திகள்

நாங்கள் இந்த ஆட்சியை வீழ்த்த விரும்புகிறோம் – பிரகாஷ் ராஜ்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) பணிகளில் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, அவர் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக சிஜேபி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜந்தர் உள்ளிட்ட சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக டெல்லி காவல்துறை அறிவித்தது.

இதையடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்று, நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதாக கூறி, சிஜேபி முக்கிய உறுப்பினர்களான செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் நேற்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கேவும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் சிஜேபி மீதான அடக்குமுறைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இந்த ஆட்சியை வீழ்த்த விரும்புகிறோம். இந்த நாட்டில் ஜனநாயக முறையிலேயே அதை வீழ்த்துவோம்.

நாங்கள் நேபாளம் அல்ல, நாங்கள் வங்கதேசம் அல்ல, எங்களிடம் அம்பேத்கர் இருக்கிறார், எங்களிடம் காந்தி இருக்கிறார், எங்களிடம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது, எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. நீங்கள் எங்களுடன் பேசாததால் எங்களை தள்ளிவிட்டீர்கள். நீங்கள் வன்முறையை பயன்படுத்துகிறீர்கள். நாங்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல. அரசியலமைப்பு சட்டமே எங்கள் ஆயுதம். போராட்டம் நடத்தும் உரிமையே எங்கள் ஆயுதம்.

மோடிஜியிடம் நான் கேட்கிறேன், உங்கள் ‘ஹர் கர் மூவர்ண முழக்கத்திற்கு என்ன ஆனது? இந்த நாட்டின் இளைஞர்கள் மூவர்ணக் கொடியுடன் நடக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.