Tamilசெய்திகள்

விண்டர்ஜி இந்தியா 2026: நாட்டின் காற்றாலை உற்பத்தியில் மையமாக திகழும் தமிழக நிறுவனங்கள்

இந்தியாவின் முதன்மையான காற்றாலை எரிசக்தி வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடான ‘விண்டர்ஜி இந்தியா 2026’, அக்டோபர் 7, 2026 முதல் அக்டோபர் 9, 2026 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்கமாக பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில், தூய்மையான மின்சார உற்பத்தி அமைப்பாக மட்டுமன்றி, தொழில்வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி துறையாகவும் உருவெடுத்துள்ள இந்தியாவின் காற்றாலை ஆற்றல் துறை குறித்து முதன்மையாகக் கவனப்படுத்தப்பட்டது.

நாட்டின் காற்றாலை மின்திறன் சேர்க்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதனை படைத்து வரும் வேளையில் இம்மாநாடு நடைபெறுகிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியா 6.05 கிகாவாட் (GW) காற்றாலை மின்திறனை புதிதாகச் சேர்த்து தனது சிறந்த ஆண்டை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், ஜூலை 31, 2026 நிலவரப்படி நாட்டின் மொத்த நிறுவப்பட்ட காற்றாலை மின்திறன் 58.14 கிகாவாட்டாக உயர்ந்துள்ளது. தற்போது சுமார் 43 கிகாவாட் அளவிலான திட்டங்கள் கட்டுமானப் பணிகளில் உள்ள நிலையில், இத்துறை 2030-க்குள் 100 கிகாவாட் இலக்கை அடைவதை நோக்கி பயணித்து வருகிறது.

“இந்தியாவின் காற்றாலை மின்திறன் கட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து, கிட்டத்தட்ட இருமடங்காகி 58 கிகாவாட்டை எட்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் 100 கிகாவாட் என்ற பெரிய இலக்கை எட்டுவதற்கு, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி ஆகிய இரண்டிலும் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்தத் துறை வளர்ச்சியில் தமிழகம் மிக முக்கிய காரணியாக விளங்கி வருகிறது. இந்தியா, உள்நாட்டுமயமாக்கலில் 70-80% வரையிலான மதிப்புக் கூட்டலை அடைந்து சாதனை படைத்திருந்தாலும், கியர்பாக்ஸ், பிரத்யேக பியரிங்ஸ்கள் மற்றும் மூலப்பொருட்கள் போன்ற உயர்-மதிப்பு உதிரிபாகங்களின் உற்பத்தியை அதிகரிப்பதே, காற்றாலைத் துறையில் முழுமையான சுயசார்பு அமைப்பை உருவாக்க வழிவகுக்கும்” என IWTMA-வின் துணைத் தலைவரும் செயலாளருமான முனைவர் சரவணன் மாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையின் முக்கிய அடையாளமாக அதன் உற்பத்தித் திறன் வளர்ச்சி உருவெடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு காற்றாலை டர்பைன் தயாரிப்புத் திறன் 2020-21-இல் இருந்த 12 கிகாவாட்டில் இருந்து தற்போது ஆண்டுக்கு 24 கிகாவாட்டாக இரட்டிப்பாகியுள்ளது. அதேபோல், 2025-26 நிதியாண்டில் காற்றாலை உபகரணங்கள் ஏற்றுமதி கிட்டத்தட்ட 50% அதிகரித்து, ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. ஏராளமான உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சியில் தொடர்ந்து முதன்மை மையமாக விளங்கி வருகிறது.

“காற்றாலைகளுக்கான முக்கிய உதிரிபாகங்களைத் தயாரிப்பது என்பது வெறும் உற்பத்தியோடு முடிந்துவிடுவதில்லை; அது அடுத்த தலைமுறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பின் முதுகெலும்பையே வடிவமைப்பதாகும். இதற்கு அதிநவீன உற்பத்தித் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதும், உள்நாட்டு விநியோகச் சங்கிலிச் சூழலை மேலும் வலுப்படுத்துவதும், வெறும் தயாரிப்பில் மட்டுமல்லாது புதுமையான கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடக்கூடிய திறமைமிக்க பொறியாளர்களை உருவாக்குவதும் அவசியமாகும். இந்தியாவில் வெறும் உபகரணங்களை ஒன்று சேர்ப்பது மட்டுமல்லாமல், சர்வதேசத் தரத்திற்கு இணையான தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்கி உலகிற்கு வழங்குவதில்தான் நாட்டின் உண்மையான வாய்ப்பு அடங்கியுள்ளது” என்று பிளெண்டர் டிரைவ்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும், IWTMA-வின் செயற்குழு உறுப்பினருமான திரு. பாண்டு சில்லக்குரு தெரிவித்துள்ளார்.

“நாட்டின் காற்றாலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்கும் போது, உயர்தரமான மற்றும் நம்பகமான உதிரிபாகங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான தரக் கட்டுப்பாடுகளிலும், ஒருங்கிணைப்பிலும் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் விநியோகச் சங்கிலியை இப்படி வலுப்படுத்துவது இந்திய காற்றாலைத் துறையை உயர்த்தவதுடன், சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பையும் வலுப்படுத்தும்” என்று திரு. முரளி சிவபெருமாள், வர்த்தக இயக்குநர் (இந்தியா & ஆசிய பசிபிக் சேவை), ZF விண்ட் பவர் கோயம்புத்தூர் மற்றும் செயற்குழு உறுப்பினர் – IWTMA, தெரிவித்தார்.

பழைய காற்றாலைகளைப் புதுப்பிக்கும் திட்டம் மூலம் தமிழகத்திற்குப் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் மேம்படுத்தப்பட வேண்டிய 25.4 கிகாவாட் பழைய காற்றாலைகளில், தமிழகத்தைச் சேர்ந்த 7.4 கிகாவாட் காற்றாலைகள் அடங்கும். இது தேசிய அளவில் மதிப்பிடப்பட்டுள்ள சுமார் ரூ. 1.4-1.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்பின் ஒரு பகுதியாகும்.. அதேபோல், கடலோரக் காற்றாலைத் திட்டத்திலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும் 1 கிகாவாட் VGF நிதியுதவி பெற்ற முதலாவது கடலோரக் காற்றாலை திட்டத்தில், குஜராட்டுடன் இணைந்து தமிழகக் கடற்கரையிலும் 500 மெகாவாட் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.

“இந்தியாவின் அடுத்தகட்ட காற்றாலை வளர்ச்சிக்கு உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு உற்பத்தி அமைப்பு மிக அவசியம். அதிக திறன் கொண்ட டர்பைன்களை நோக்கித் துறை நகர்ந்து வரும் நிலையில், முக்கிய உதிரிபாகங்களின் உள்நாட்டு உற்பத்தியை விரைவுபடுத்துவதோடு, சந்தைத் தேவையை எதிர்கொள்ளும் அளவுக்கு உற்பத்தித் திறனையும் அதிகரிக்க வேண்டும். இதற்காக உபகரண உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசு இணைந்து விநியோகச் சங்கிலியை பலப்படுத்த வேண்டும். இந்த முழுமையான உற்பத்திச் சூழலை ஒரே இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு ‘விண்டர்ஜி இந்தியா 2026’ ஒரு சிறந்த தளமாக அமைகிறது” என்று இந்திய காற்றாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (IWTMA) தலைமைச் செயல் அதிகாரி திரு. ஆதித்யா பியாசி தெரிவித்துள்ளார்.

“சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடான ‘விண்டர்ஜி இந்தியா’, முழு காற்றாலை உற்பத்திச் சூழலையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் ஒரு மாபெரும் தளமாக வளர்ந்துள்ளது. இந்தியா தனது மின்திறன் இலக்குகளை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சூழலில், இத்துறை சார்ந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச அளவில் வளர்வதற்குக் களமமைத்துக் கொடுக்கும் நமது பங்களிப்பை நாங்கள் தொடர்ந்து சிறப்பாக வழங்குவோம்” என்று பிடிஏ வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. பிரதீப் தேவையா கூறியுள்ளார்.

இந்திய காற்றாலை தயாரிப்பாளர்கள் சங்கம் (IWTMA) மற்றும் பிடிஏ வென்ச்சர்ஸ் (PDA Ventures Pvt Ltd) ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்படும் ‘விண்டர்ஜி இந்தியா 2026’ மாநாடு, மத்திய மின்துறை மற்றும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகங்களின் (MNRE) ஆதரவோடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள், 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 350 காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் ‘சுஸ்லான் இந்தியா’ (Suzlon India) பிளாட்டினம் கூட்டாளராகவும், ‘என்விஷன்’ (Envision) மற்றும் ‘சென்வியான்’ (Senvion) ஆகிய நிறுவனங்கள் கோல்ட் கூட்டாளர்களாகவும் செயல்படுகின்றன. 2 நாட்கள் நடைபெறும் ‘Wind – Powering India’s Energy Resilience’ வர்த்தக மாநாடு மற்றும் பிரத்யேக அகாடமியா அமர்வும் இந்நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கங்களாகும்.

மேலும் தகவலுக்கு www.windergy.in இணையதளத்தைப் பார்வையிடவும்.