தோழர் நல்லக்கண்ணு மறைவு – பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தியாகச் செம்மல் தோழர் நல்லக்கண்ணு, வயதுமுதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தநிலையில் இன்று காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.
கட்சியின் தலைமை அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நல்லக்கண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, “அடிதட்டு மக்கள், தொண்டர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நல்லகண்ணு அவர்கள் நினைவு கூரப்படுவார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர். அதேபோல், அவரது எளிமை மிகவும் குறிப்பிடத்தக்கது. எனது ஆறுதல்கள் எப்போதும் அவரது குடும்பத்தினருடனும், தொண்டர்களுடனும் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி, “தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது இந்த வாழ்க்கை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கானது. கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக (90 ஆண்டுகள்), அவர் நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார். அவருடைய குடும்பத்தினருக்கும், சகாக்களுக்கும் மற்றும் எண்ணற்ற தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
