Tamilசெய்திகள்

2 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சைகள்: சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை சாதனை

போர்டிஸ் ஹெல்த்கேரின் ஒரு அங்கமான சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை கடந்த 28 மாதங்களில் 500 ரோபோட்டிக் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக விரைவான சாதனைகளில் ஒன்றாகும்.

இது பெண்களின் ஆரோக்கியத்திற்காக தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை காட்டுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக, மருத்துவமனையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவக் குழுவினரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் பயன்பெற்ற நோயாளிகளும் கலந்து கொண்டனர்.

சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறை இயக்குனரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மப்ரியா விவேக் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் கர்ப்பப்பை அகற்றுதல், நார்த்திசுக்கட்டி அகற்றுதல், தீவிர எண்டோமெட்ரியோசிஸ் நீக்கம், மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மற்றும் நார்த்திசுக்கட்டிகள், அடினோமயோசிஸ், கருப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை இறக்கம் போன்ற பல சிக்கலான மற்றும் அதிக ஆபத்துள்ள அறுவை சிகிச்சைகளை கையாள்வதில் பெரும் அனுபவம் பெற்றவர் ஆவார்.

இந்த 500 ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சாதனைகளில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக, 5 கிலோ எடையுள்ள நார்த்திசுக்கட்டியுடன் கர்ப்பப்பையை அகற்றிய உலக சாதனை அறுவை சிகிச்சையும் அடங்கும். இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் கையாள முடியும் என்பதை நிரூபித்துள்ளது. 25 முதல் 70 வயது வரையிலான பல்வேறு வயதுடைய பெண்கள் இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மூலம் பயனடைந்துள்ளனர். இதில், தாய்மை அடைவதைப் பாதுகாக்கும் சிகிச்சைகள் தேவைப்படும் இளம் நோயாளிகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெறும் வயதான நோயாளிகளும் அடங்குவர். ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மூலம் நோயாளிகளுக்கு பல நன்மைகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக, குறைந்த அளவிலான ரத்த இழப்பு, சிறிய தழும்புகள், அறுவை சிகிச்சைக்குப் பின் குறைவான வலி மற்றும் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவு ஆகியவை இதில் முக்கிய அம்சமாகும். இதனால் நோயாளிகள் மிக விரைவாக குணமடைந்து தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் எளிதாக திரும்ப முடிகிறது.

இது குறித்து இம்மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறை இயக்குனரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மப்ரியா விவேக் கூறுகையில், “மிகக் குறுகிய காலத்தில் 500 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்திருப்பது, பல்வேறு வகையான மகளிர் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எங்களுக்கு சிறந்த அனுபவத்தை அளித்துள்ளது. ரோபோட்டிக் தொழில்நுட்பமானது, சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் மிகவும் துல்லியமாகவும், உள்ளுறுப்புகளைத் தெளிவாகப் பார்த்தும் செய்ய உதவுகிறது; இதனால் நோயாளிகள் விரைவில் குணமடைய முடிகிறது,” என்றார்.

இம்மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரியும், மருத்துவமனைத் தலைவருமான எஸ். நிரஞ்சனி கூறுகையில், “மகளிர் நோய்களுக்கான சிகிச்சையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை ஒரு முக்கிய முன்னேற்றமாக மாறியுள்ளது. அறுவை சிகிச்சையின் போது உறுப்புகளை முப்பரிமாண தோற்றத்தில் பார்க்கவும், கருவிகளைச் சிறப்பாகக் கையாளவும் முடிவதால், மருத்துவர்களால் மிகவும் துல்லியமாகச் செயல்பட முடிகிறது. குறிப்பாக, இடுப்புப் பகுதி தொடர்பான சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது, சுற்றியுள்ள மற்ற திசுக்களைப் பாதிக்காமல் பாதுகாக்கவும், நோயாளிகள் விரைவாகக் குணமடையவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,” என்றார்.

போர்டிஸ் ஹெல்த்கேர் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி அனில் வினாயக் கூறுகையில், “நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைகளைச் செய்வதில் போர்டிஸ் ஹெல்த்கேர் எப்போதும் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் ரோபோட்டிக் மகளிர் மருத்துவத் திட்டத்தின் வெற்றி, நோயாளிகளுக்கான உயர்தர சிகிச்சையை வழங்குவதிலும், குறைவான தழும்புகளை ஏற்படுத்தும் நவீன அறுவை சிகிச்சைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதிலுமான எங்களது நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான புதிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் எங்களது நோக்கத்தை இதுபோன்ற சாதனைகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்றார்.

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் நோயாளி ஒருவர் கூறுகையில், “எனக்கு இருந்த ஒரு சிக்கலான பிரச்சினைக்கு ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனக்கு வலியும் ரத்த இழப்பும் மிகக் குறைவாகவே இருந்தது. எதிர்பார்த்ததை விட சீக்கிரமே நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். குறுகிய காலத்திலேயே என்னால் எனது வழக்கமான வேலைகளைச் செய்ய முடிந்தது. இது நான் விரைவாகக் குணமடைவதில் ஒரு பெரிய நன்மையை ஏற்படுத்தியது,” என்றார்.

சென்னையைச் சேர்ந்த மற்றொரு நோயாளி கூறுகையில், “இந்த சிகிச்சையின் போது, சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் மிகவும் துல்லியமாக அகற்றப்பட்டன. சிறிய அளவிலான தழும்புகள் மற்றும் குறைவான வலிகளால், அறுவை சிகிச்சைக்குப் பின் எந்தவொரு பெரிய சிக்கலும் இன்றி நான் எளிதாகக் குணமடைந்தேன். மேலும், மிக விரைவாக எனது அன்றாடப் பணிகளுக்கும் திரும்ப முடிந்தது,” என்றார்.