தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கூடுகிறது
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை காலை 10:00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் கூடவுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். சட்டமன்ற பேரவை விதி 181(1)-ன்கீழ் 2026–2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (Revised Budget) ஆகஸ்ட் 5-ஆம் தேதி பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் நாள் குறித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் காலை 10:00 மணிக்கு 2026–2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இதில் இடம்பெறவுள்ள புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
