ரேலா மருத்துவமனை சாதனை! – 97 வயது முதியவருக்கு சிதைந்து மக்கக்கூடிய தோள்பட்டை செயல்பாடு மீட்பு
வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்ததால், தோள்பட்டை தசைநாண் பகுதியில் மிகக் கடுமையான மற்றும் சரிசெய்யவே முடியாது எனக் கருதப்பட்ட கிழிசலால் அவதிப்பட்டு வந்த 97 வயது முதியவருக்கு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை புதிய வாழ்வளித்துள்ளது. அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை மூலம், இயற்கையாகவே மட்கி அழியக்கூடிய ஒரு சிறப்பு பலூனை அவரது தோள்பட்டையில் பொருத்தி, மருத்துவர்கள் அவரது வலியை குணமாக்கி, கையின் செயல்பாட்டை மீட்டு தந்திருக்கின்றனர்.
முதியவரின் வயது மற்றும் பலவீனமான இதய நிலையை கருத்தில் கொண்ட மருத்துவக் குழு, அவருக்குப் பொது மயக்க மருந்து அளிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் அதைத் தவிர்த்தது. அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்யும் நவீன முறையைக் கையாண்டதால், அறுவை சிகிச்சையின் போது நோாயாளி முழு விழிப்புடன் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தார்.
மிகக் குறைந்த அளவிலான துளை மட்டுமே போடப்பட்ட இந்தத் நவீன சிகிச்சையின் பலனாக, அந்த முதியவர் பொது வார்டில் சில நாட்கள் தங்கி, முறையான பிசியோதெரபி பயிற்சிகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை முடிந்த இரண்டே நாட்களில் தன் சொந்தக் காலில் நடந்து ஆரோக்கியமாக வீட்டிற்குத் திரும்பினார்.
நம் மணிக்கட்டைச் சுற்றியுள்ள கஃப் பட்டை போல, தோள்பட்டை மூட்டினைச் சுற்றியுள்ள நான்கு முக்கியத் தசைகள் மற்றும் அவற்றின் தசைநாண்களின் தொகுப்பே ‘ரோட்டேட்டர் கப்’ எனப்படுகிறது. இவைதான் தோள்பந்து எலும்பை அதன் குழிக்குள் கச்சிதமாகப் பிடித்து வைத்துக்கொண்டு, கையை உயர்த்துவதற்கும் சுழற்றுவதற்கும் உதவுகின்றன. கீழே விழுந்ததில் இந்த முதியவரின் இடது தோள்பட்டையில் பெரும் பிளவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியான கடும் வலியால் இவர் அவதிப்பட்டார். அவரால் இடது கையைச் சிறிதும் அசைக்க முடியவில்லை; ஓய்வு எடுத்தும் வலி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.
இதையடுத்து, ரேலா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வரப்பட்ட இம்முதியவருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர்கள், ‘InSpace™’ என்ற மட்கி கரைந்துபோகும் தன்மை கொண்ட ஒரு பலூனைப் பயன்படுத்தி இந்த மருத்துவ சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மிகக் கடுமையான தசைநாண் கிழிசல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, உடலிலேயே கரையக்கூடிய ஒரே மருத்துவ தயாரிப்பு இதுவாகும். இந்த முறையில், சிறிய துளைகள் வழியாக சிறிய சுருங்கிய பலூன் தோள்பட்டை எலும்புக்குக் கீழே செலுத்தப்பட்டு, தூய்மையான உப்பு நீர் மூலம் மெதுவாக உப்ப வைக்கப்படுகிறது. இந்த பலூன் ஒரு மென்மையான மெத்தை போல மாறி, எலும்புகள் ஒன்றோடொன்று உராயும் போது ஏற்படும் தாங்க முடியாத வலியைத் தடுத்து, கையை எளிதாக உயர்த்த வைக்கிறது. சில மாதங்களில் இந்த பலூன் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் தானாகவே கரைந்துவிடும்; அதற்குள் தோள்பட்டை தசைகள் இந்த இயக்கத்திற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும். இதனால் உடலுக்குள் எந்தவொரு நிரந்தரமான திருகுகளோ அல்லது உலோகத் தாங்கிப் பொருட்களோ எஞ்சியிருக்காது.
ரேலா மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை துறை தலைவர் டாக்டர். அசோக் எஸ். கவாஸ்கவர் பேசுகையில்: “இந்த நோயாளிக்கு தசைநாண் கிழிசல் மிக மோசமாக இருந்தது. தசைநாணின் பெரும்பகுதி எலும்பிலிருந்து பிரிந்து சுருங்கிவிட்டதால், வழக்கமான தசைநாண் தையல் முறை இவருக்கு சாத்தியமற்றதாக இருந்தது. 97 வயது முதியவருக்கு இத்தகைய பெரிய பாதிப்பைக் கையாண்டு சிகிச்சை அளிப்பது மருத்துவ ரீதியில் ஒரு பெரிய சவாலாகும். பொதுவாக இச்சிகிச்சை பொது மயக்க மருந்து அளிக்கப்பட்டே செய்யப்படும். ஆனால், இம்முதியவருக்கு ஆபத்துக்கான வாய்ப்பை தவிர்க்க ‘இன்டர்ஸ்கேலீன் நரம்பு மரத்துப்போகச் செய்யும் முறை’ மூலம் தோள்பட்டை பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்து, நோயாளி முழு விழிப்புடன் இருக்கும்போதே அறுவை சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம். இது வயதுமுதிர்ந்த நபருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுத்து, வேகமாகவும், பாதுகாப்பாகவும் அவர் குணமடைய உதவியது.” என்றார்.
இந்தச் சாதனை அறுவை சிகிச்சைக் குழுவிற்குத் தலைமை தாங்கிய ரேலா மருத்துவமனையின் எலும்பியல், நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை பேசுகையில், தோள்பட்டைப் பகுதியில் ஏற்படும் தசைநார் கிழிவுகள் (Rotator cuff tears) இன்று மிகவும் பொதுவான எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளன; குறிப்பாக வயது கூடிக்கொண்டே போகும்போது இந்த பாதிப்பு ஏற்படும் அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது. இந்தியாவின் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆரோக்கியப் பிரச்சனை மருத்துவத் துறைக்கு ஒரு சவாலான சுமையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 40 வயதைக் கடந்த ஐந்து முதியவர்களில் ஒருவருக்கு ஏதோ ஒரு வகையில் தோள்பட்டை தசைநார் கிழிவு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அடுத்தடுத்த ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இந்த பாதிப்பின் வீரியம் மிகத் தீவிரமாக அதிகரிக்கும். இந்த வயது பிரிவில் கிட்டத்தட்ட 10 முதல் 11 சதவீத நபர்களுக்கு தசைநார் முற்றிலும் கிழிந்திருக்கும் கடுமையான பாதிப்புகள் காணப்படுகின்றன.” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “வயது முதிர்வே இதற்கு மிக முக்கியமான முதன்மைக் காரணியாக விளங்குகிறது. ஏனெனில், காலப்போக்கில் நமது தசைநார்கள் இயற்கையாகவே பலவீனமடைந்து தேய்மானத்திற்கு உள்ளாகின்றன. வயது முதிர்வால் ஏற்படும் இத்தகைய பலவீனமான சூழலில், பார்ப்பதற்கு ஏதோ ஒரு சாதாரண லேசான தடுமாற்றம் அல்லது கீழே விழுதல் கூட, தோள்பட்டையில் ஒரு பெரிய தசைநார் கிழிவை ஏற்படுத்த போதுமானதாக அமைந்துவிடுகிறது. இது தவிர, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கைகளை தலைக்கு மேலே தூக்கித் தொடர்ந்து வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
ரேலா மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா இந்த சாதனை சிகிச்சைக்காக மருத்துவக் குழுவை பாராட்டினார் மற்றும் அவர் பேசுகையில், “97 வயதில், நோயாளி முழு விழிப்புடன் இருக்கும்போதே இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது மருத்துவத் துறையில் ஒரு மைல்கல் சாதனையாகும். நோயாளியின் வயதுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பின் அவசியத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெரிய அளவிலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையோ அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சையோ இல்லாமல், மட்கும் பலூன் மூலம் இதற்கு எளிய தீர்வு காண முடியும் என்பதை இந்த நவீனத் தொழில்நுட்பம் நிரூபித்துள்ளது.
வயதானவர்கள் தோள்பட்டை வலி மற்றும் கையைத் தூக்க முடியாமல் போவதை ‘வயதாகிவிட்டது’ என்று சகித்துக் கொண்டு வேதனையை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. சரியான தொழில்நுட்பத்தை நாம் தேர்ந்தெடுக்கும்போது, வயதோ அல்லது இதயப் பாதிப்போ சிகிச்சைக்குத் தடையாக இருக்காது. 90 வயதைக் கடந்தவர்களுக்கும் நவீன மருத்துவ முறையில் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதால், நோயாளிகள் சிகிச்சையைத் தாமதப்படுத்தாமல், ஆரம்பக்கட்டத்திலேயே நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
