Tamilசெய்திகள்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றுவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, வேலூர், சேலம் மற்றும் நாமக்கல் போன்ற உள் மாவட்டங்களில் வழக்கமான வெப்பநிலையை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இதனால், சில இடங்களில் வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பம் ஒருபுறம் வாட்டினாலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்திய அளவில் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் வெப்பநிலை 44 முதல் 45 டிகிரி வரை எட்டக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் சில இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.