Tamilசெய்திகள்

விண்வெளியிலேயே ஏ.ஐ (AI) கணினி மையங்களை அமைக்க கூகுள் திட்டம்! – ப்ளூ ஆரிஜின் ராக்கெட் தேர்வு!

செயற்கை நுண்ணறிவு (AI) கணினி அமைப்புகளைச் செயற்கைக்கோள்கள் வழியாக விண்வெளியிலேயே இயக்குவதற்கான ‘புராஜெக்ட் சன்கேட்சர்’ (Project Suncatcher) திட்டத்திற்காக, ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் (Blue Origin) நிறுவனத்தின் ராக்கெட்டைக் கூகுள் (Google) தேர்ந்தெடுத்துள்ளது.

பூமியில் உள்ள பெரிய டேட்டா சென்டர்களுக்கு (Data Centers)த் தேவையான பிரம்மாண்ட மின்சாரம் மற்றும் குளிர்விப்பு (Cooling) வசதிகளுக்கு மாற்றாக, விண்வெளியில் தொடர்ந்து கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தடையின்றி ஏ.ஐ கணினி மையங்களைச் செயல்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இரவு – பகல் சுழற்சி அல்லது வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத விண்வெளிச் சூழலில் சூரிய ஆற்றலை நேரடியாகப் பெற்று, அதிநவீன ஏ.ஐ சிப்கள் மற்றும் கணினி உள்கட்டமைப்புகளைச் சுமந்து செல்லும் செயற்கைக்கோள்களைக் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

பூமியின் நிலப்பரப்பு, தண்ணீர் மற்றும் மின் கட்டமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, எதிர்கால ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு விண்வெளியை ஒரு புதிய தளமாக மாற்றுவதில் இந்தக் கூட்டு முயற்சி முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.