டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு!
டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வரும் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், வக்கு சட்டம் மற்றும் FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான அம்சங்களை ஆரம்பம் முதலே துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய திமுக, ‘இந்தியா’ கூட்டணி தொடங்கியதில் இருந்தே அதன் மையச் சக்தியாக இயங்கி வந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், காங்கிரஸ் பங்கேற்கும் இந்த ஜூன் 8 கூட்டத்தில் திமுக பங்கேற்காது எனத் தலைமைக்கழகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் திமுக என்றைக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
