Tamilசெய்திகள்

சட்டசபையில் ஓபிஎஸுக்கும், அமைச்சர்களுக்கும் காரசார விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே நடைபெற்ற காரசார விவாதத்தின் இடையே, “ஓபிஎஸ் அவர்களின் இடமும் மாறிவிட்டது, இதயமும் மாறிவிட்டது” என்று அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துப் பேசினார்.

பேரவையில் ஓபிஎஸ் இடம் மாறியது குறித்து செங்கோட்டையன் விமர்சித்தபோது, “முதலில் இடம் மாறியதே செங்கோட்டையன்தான்” என ஓபிஎஸ் பதிலளித்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறியபோதிலும், அவரது இதயத்திற்கு அருகில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழற்படத்தை மாற்ற வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர்; ஆனால் ஓபிஎஸ் அவர்களின் சட்டப் பையைப் பார்க்கும்போது அவரது இடமும் மாறிவிட்டது, இதயமும் மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜெயலலிதாவால் முதலவராக்கப்பட்ட ஓபிஎஸ்-ன் சட்டப் பையில் தற்போது யாருடைய புகைப்படம் இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் என்றார். இக்கருத்துகளுக்குப் பதிலளித்த ஓபிஎஸ், “பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத் எங்கள் இதயத்தில் நிலையாக வைத்துள்ளோம்; புகைப்படத்தைக் காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை” என்று விளக்கமளித்தார்.