6 மாதங்களாக சிகிச்சையளிக்கப்படாத எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகலுக்கு தோள்பட்டை மறுசீரமைப்பு சிகிச்சை – எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனையில் சாதனை
எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு மேற்கொள்ளப்பட்ட ஓர் அரிய மற்றும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம், அவரது இடது கையின் வலியை முழுமையாகப் போக்கி, மீண்டும் கை இயக்கத்தை மீட்டெடுத்து சாதனை படைத்துள்ளது. இவர் சுமார் ஆறு மாதங்களாகத் தனது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகலுக்கு முறையான சிகிச்சை பெறாமல் கவனக்குறைவாக இருந்துள்ளார். இதனால், அந்தப் பாதிப்பு நாள்பட்ட மூட்டு விலகலாக மாறி, அடர்த்தியான தழும்பு திசுக்களை உருவாக்கியதுடன், மாற்று இடத்தில் ஒரு போலி மூட்டையும் உருவாக்கியது. மேலும் தோள்பட்டை, கை மற்றும் விரல்களின் இயக்கம் மற்றும் உணர்வை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பிரேக்கியல் பிளெக்ஸஸ் நரம்புப் பின்னல் அமைப்பை இந்தக் கோளாறு கடுமையாக அழுத்தி ஒடுக்கியிருந்தது.
அதிநவீன அறுவைசிகிச்சை மற்றும் நிபுணர்களின் கூட்டு முயற்சியால், முக்கிய நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு, தோள்பட்டை அதன் இயல்பான உடற்கூறியல் அமைப்புக்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சிகிச்சையின் மூலம் தோள்பட்டையின் இயற்கையான தோற்றமும் சீரமைக்கப்பட்டது. மருத்துவமனையில் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, வலியிலிருந்து விடுபட்டு, இடது கை இயக்கத்தில் நல்ல முன்னேற்றத்துடன் வீடு திரும்பினார். தற்போது அவர் பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வுக் குழுவின் முறையான வழிகாட்டுதலின் கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் அவரது கையின் பலம், அசைவு மற்றும் சுதந்திரமாக இயங்கும் தன்மை சீராக முன்னேறி வருகிறது.
ஆறு மாதங்களாகத் தோள்பட்டை விலகியிருந்ததால், மேற்கை எலும்பின் முனை இயல்பான இடத்திலிருந்து விலகி தழும்பு திசுக்களுக்குள் சிக்கியிருந்தது. அறுவைசிகிச்சையில் விலகிய எலும்பை சரியான இடத்திற்கு மாற்றி, இறுகிய மூட்டு உறையைத் தளர்த்தி, தழும்புத் திசுக்களை அகற்றி தோள்பட்டையின் இயல்பான இயக்கத்திறனை மருத்துவர்கள் மீட்டெடுத்தனர்.
தோள்பட்டை மீண்டும் விலகிவிடாமல் நீண்ட கால நிலைத்தன்மையைப் பராமரிக்க, மருத்துவர்கள் ‘லேட்டார்ஜெட்’ (Latarjet) என்ற சிறப்பு அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டனர். இதில் ‘கோராகாய்டு’ எனப்படும் ஒரு சிறிய எலும்புத் துண்டு தோள்பட்டை குழியின் முன்பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த எலும்பு மாற்று கூடுதல் ஆதரவாகச் செயல்பட்டு, தோள்பட்டை மீண்டும் விலகும் அபாயத்தைப் பெருமளவு குறைக்கிறது.
நீண்டகால மூட்டு விலகல் காரணமாக நரம்பு மண்டலத்தில் தழும்புத் திசுக்கள் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்ததால், பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள் பிரேக்கியல் பிளெக்ஸஸ் நியூரோலிசிஸ் என்ற நுட்பமான சிகிச்சையை மேற்கொண்டனர். இதன் மூலம் நரம்புகளைச் சுற்றியிருந்த தழும்புத் திசுக்கள் விடுவிக்கப்பட்டு, நரம்புகளின் மீதான அழுத்தம் நீக்கப்பட்டது. இது அறுவை சிகிச்சையின் போது நரம்புகளைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்டிருந்த கையில் பலம், இயக்கம் மற்றும் தொடு உணர்வை முழுமையாக மீட்டெடுக்க பெரிதும் உதவியது.
ஒருங்கிணைந்து செய்யப்பட்ட இத்தகைய மேம்பட்ட மற்றும் சிறப்பு சிகிச்சை செயல்முறைகள் தோள்பட்டையை அதன் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்தது. அத்துடன், வலியைப் போக்கி, நிலைத்தன்மையை மேம்படுத்தி, நரம்புகளைப் பாதுகாத்த இச்செயல்முறைகள், நோயாளி நீண்ட காலத்திற்குப் பயனடையும் வகையில் கையின் இயக்கத்திறன் மீட்பை சாத்தியமாக்கியது.
இந்த அறுவைசிகிச்சையை எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் நிகில் ஜவஹர்லால் நகார், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் டாக்டர் லோகேஷ் சூர்யநாராயணன் மற்றும் டாக்டர் சுபாஷினி, மயக்கவியல் மூத்த நிபுணர் டாக்டர் கே. பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. எலும்பியல் சிகிச்சைக் குழுவினர் லேட்டார்ஜெட் உள்ளிட்ட தோள்பட்டை மறுசீரமைப்பையும், பிளாஸ்டிக் சர்ஜரி குழுவினர் தழும்பு திசுக்களிலிருந்து நரம்புகளை விடுவித்து அவற்றின் செயல்பாட்டையும் மீட்டெடுத்தனர்.
இது குறித்து தோள்பட்டை மற்றும் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் நிகில் ஜவஹர்லால் நகார் கூறுகையில்: “இந்தக் காயம் சுமார் ஆறு மாதங்களாக சிகிச்சையின்றி கவனிக்கப்படாமல் விடப்பட்டதால், இது மிகவும் சவாலான ஒரு தோள்பட்டை மறுசீரமைப்பு அறுவைசிகிச்சையாக அமைந்தது. நோயாளி எங்களிடம் வந்தபோது, தோள்பட்டை நாள்பட்ட மூட்டு விலகலாக மாறி, கடுமையான தழும்பு திசுக்களாலும், பிரேக்கியல் பிளெக்ஸஸ் நரம்பு அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், விலகிய மேற்கை எலும்பு, கைக்கு ரத்தத்தை வழங்கும் முக்கிய ரத்தக் குழாயான அக்குள் தமனிக்கு மிக ஆபத்தான முறையில் அருகில் இருந்தது. நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களை மிகக் கவனமாகப் பாதுகாத்து, தோள்பட்டையை அதன் இயல்பான நிலைக்கு மீட்டெடுப்பதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. இதற்குத் துல்லியமான திட்டமிடல், நவீன இமேஜிங் முறைகள், அறுவைசிகிச்சையின் போதான நரம்பு கண்காணிப்பு மற்றும் பல்வேறு துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி அவசியமாக இருந்தது. எட்டு மணி நேரம் நீடித்த இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு, நோயாளி வலியிலிருந்து விடுபட்டு, கையின் இயக்கத்திறனை மீண்டும் பெற்றார். இதன் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்நோயாளிக்கு உதவியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.
எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனை CEO திரு. சிவா கூறுகையில்: “சிக்கலான எலும்பியல் பாதிப்புகளைக் கையாள்வதற்கான நிபுணத்துவம் மற்றும் மருத்துவ ஒருங்கிணைப்பிற்கு இச்சிகிச்சை சிறந்த சான்றாகும். ஆறு மாதங்களாகக் கவனிக்கப்படாத மூட்டு விலகலாக இருந்தபோதிலும், மேம்பட்ட அறுவைசிகிச்சை நுட்பங்கள் மற்றும் தடையற்ற ஒருங்கிணைப்பு மூலம் எங்கள் குழுவினர் தோள்பட்டையை வெற்றிகரமாக மறுசீரமைத்துள்ளனர். சிக்கலான நிலைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்கி, நோயாளிகள் தங்களின் இயக்கம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை மீண்டும் பெற உதவுவதில் எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனை அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது,” என்றார்.
தோள்பட்டையில் ஏற்படும் எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகல்களை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது என்று அறுவை சிகிச்சைக் குழுவினர் வலியுறுத்துகின்றனர். குறிப்பாகக் காயத்திற்குப் பிறகு தொடர்ந்து வலி, மூட்டில் காணப்படும் உருவ மாற்றம், கையை அசைக்க இயலாமை, பலவீனம் அல்லது மரத்துப் போதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கடுமையான தோள்பட்டை காயங்களுக்குப் பிறகு உடனடியாக முறையான பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து கொள்வது, நாள்பட்ட குறைபாடுகள், நரம்பு மற்றும் ரத்தக் குழாய் பாதிப்புகள் மற்றும் கையின் இயக்கத்திறன் இழக்கப்படுவதை தவிர்க்க மிகவும் அவசியமாகும்.
