சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழா – போக்குவரத்து மாற்றங்களை அறிவித்த காவல்துறை
சென்னை பெசன்ட் நகரில் உள்ள புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் வருடாந்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்ய சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை சிறப்புப் போக்குவரத்து மாற்றங்களையும், பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களையும் அறிவித்துள்ளது.
திருவிழா ஊர்வலங்களின் போது 6-வது அவென்யூ (பீச் ரோடு), 2-வது அவென்யூ, 3-வது அவென்யூ, 4-வது பிரதான சாலை மற்றும் 7-வது அவென்யூவைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இதன் காரணமாக, கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) வழியே வரும் வாகனங்கள் அடையார் பேருந்து நிலையம், இந்திரா நகர் 2-வது அவென்யூ மற்றும் இந்திரா நகர் 1-வது பிரதான சாலை வழியாக எல்.பி. சாலையை நோக்கித் திருப்பி விடப்படும்.
அதேபோலப் பேருந்துகள் எம்.ஜி. சாலை மற்றும் சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை வழியாக இயங்கும். மேலும், பக்தர்களின் வசதிக்காக ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பெசன்ட் நகர் 2-வது பிரதான சாலை, 4-வது அவென்யூ மற்றும் 17-வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
