2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் – காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் உறுதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தில் நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி விஜய் வசந்த் கூறியதாவது: “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் துயரச் சம்பவத்தில் பல உயிர்களை இழந்துள்ளோம். ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். தகவலறிந்த உடனடியாகத் தமிழக முதலமைச்சர், அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்குச் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கைகளைச் தீவிரமாக மேற்கொள்ளும். 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான நோக்கம். தவெகவினர் அவர்களது கருத்துகளைக் கூறியிருக்கலாம்; ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்.
தற்போதுள்ள மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாட்டில் மாற்றம் வேண்டும்; இளைஞர்களுக்கான மற்றும் மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
