5ஜி சேவை உள்கட்டமைப்பை விரிவுபடுத்த செல் கோபுரங்களின் மின்காந்தப் புல கதிர்வீச்சு வரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு
இந்தியாவில் 5G சேவை உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், தொலைத்தொடர்புச் சேவையை மேம்படுத்தவும் 5G செல் கோபுரங்களின் மின்காந்தப் புல (EMF) கதிர்வீச்சு வரம்பை செப்டம்பர் 2026 முதல் ஒரு சதுர மீட்டருக்கு 5 வாட்டிலிருந்து 10 வாட்டாக (5 to 10W/m²) உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
சர்வதேச தொற்றா கதிர்வீச்சு பாதுகாப்பு ஆணையத்தின் (ICNIRP) வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும், ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட 137 நாடுகளின் உலகளாவிய தரநிலைகளுக்கு ஈடாகவும் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு 5G கோபுரமும் அதிக பரப்பளவிற்குச் சிக்னல்களை அனுப்ப முடியும் என்பதால் புதிய கோபுரங்கள் அமைக்கும் தேவையைக் குறைத்து, நிறுவனங்களின் முதலீட்டுச் செலவையும் கணிசமாகக் குறைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் 5G நெட்வொர்க்கை அமைத்து வரும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமைவதோடு, நகர்ப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தடங்கலற்ற 5G சேவை கிடைக்கவும் வழிவகுக்கும்.
