ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் – வீடியோவை வெளியிட்டு பாஜக கிண்டல்
எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், ராகுல் காந்தியின் வியட்நாம் பயணத்தை முன்வைத்து பாஜக விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
ராகுல் காந்தி விமானத்தின் பிசினஸ் கிளாஸ் பகுதியில் பயணம் செய்யும் காணொளியை பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நீல நிற டி-ஷர்ட் அணிந்து, ஏர்பாட்ஸ் பயன்படுத்தியபடி விமான இருக்கையில் அவர் அமர்ந்திருப்பது அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், “பொய்களைப் பரப்புவதில் சோர்வடைந்துவிட்டேன்; சில நாட்கள் வியட்நாமில் சுற்றித் திரியப் போகிறேன். இதை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?” என்ற தொனியில் ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் பாஜக பதிவிட்டுள்ளது.
இதற்கிடையே, ராகுல் காந்தி தனது தனிப்பட்ட நேரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வட்டாரங்களின் தகவலின்படி, தனிப்பட்ட பயணமாக ராகுல் காந்தி நான்கு நாட்கள் வியட்நாமில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவரது வெளிநாட்டுப் பயணத்தை மையமாகக் கொண்டு பாஜக விமர்சனம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
