Tamilசெய்திகள்

தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோவிலில் இன்று மகிஷாசூரசம்ஹாரம் விழா!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு, லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கடற்கரையில் விழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் அம்மன் பல்வேறு திருத்தல வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்ததுடன், நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகக் காப்பு கட்டி விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, அனுமன், சிவன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல வேடங்களை அணிந்து கிராமம் கிராமமாகச் சென்று காணிக்கை வசூலித்து வந்தனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சிதம்பரேஸ்வரர் கோவில் அருகேயுள்ள வங்கக்கடல் கடற்கரை மைதானத்திற்குச் சென்று, “ஓம் காளி, ஜெய்காளி” என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே எருமைத் தலை, சிம்ம முகம், யானை முகம் மற்றும் சேவல் உருவில் மாறி மாறிவரும் மகிஷாசூரனை அடுத்தடுத்து வதம் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளது.

சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் கடற்கரை மேடையில் எழுந்தருளும் அம்மனுக்குச் சிறப்புப் பாலாபிஷேகமும் மகா தீபாராதனையும் நடத்தப்படுவதுடன், நாளை (புதன்கிழமை) அதிகாலை பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து மாலையில் கோயிலை அடைந்ததும் கொடியிறக்கப்பட்டு பக்தர்களின் காப்புகள் களையப்படுவதோடு இந்த ஆண்டுக்கான தசரா பெருவிழா நிறைவுபெறும்.