Tamilசெய்திகள்

சென்னையில் 32-வது இந்திய பிளம்பிங் கருத்தரங்கு – நீர், பிளம்பிங் & சுகாதாரத்திற்கான சவால்களும் தீர்வுகளும்!

இந்தியாவின் கட்டுமானத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நீர், பிளம்பிங், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளின் முன்னணி நிபுணர்கள் ஒன்றிணையும் 32-வது இந்திய பிளம்பிங் கருத்தரங்கு (IPC 2026), வரும் 2026 டிசம்பர் 17 முதல் 19 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

இந்திய பிளம்பிங் சங்கம் (IPA) ஏற்பாடு செய்துள்ள இந்த 32-வது கருத்தரங்கோடு, 100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் நவீன தயாரிப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 50,000 சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இக்கருத்தரங்கல், நீர், சுகாதாரம் மற்றும் பிளம்பிங் துறையின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா முழுவதிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இத்துறை சார்ந்த அதிநவீன மற்றும் நிலையான தீர்வுகளை முன்னிலைப்படுத்துவதோடு, தொழில்ரீதியான கூட்டு முயற்சிகள், தொடர்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் இக்கருத்தரங்கு அமையும்.

இந்த மூன்று நாள் கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம். மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகள் www.indianplumbingconference.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

“நீர், பிளம்பிங் மற்றும் சுகாதாரம்: செயல்பாடு & பராமரிப்பு (சவால்கள் & தீர்வுகள்)” என்ற மையக்கருத்துடன் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருத்தரங்கு மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் நீர், கழிவுநீர் மற்றும் குழாய் அமைப்புகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு, அத்துடன் விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் வடிவமைப்பு மற்றும் நிறுவுதல் முறையில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் ஆகியவை குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும். டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் மொத்தம் 3 குழு விவாதங்கள் மற்றும் 2 தொழில்நுட்ப அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. முன்னணி வல்லுநர்கள், மூத்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டு கொள்கை சார்ந்த நுண்ணறிவுகளையும் தொழில்நுட்பத் தீர்வுகளையும் பகிர்ந்துகொள்ள உள்ளனர். மேலும், நீர் மேலாண்மைத் திறன், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு, தடுப்பு மற்றும் முன்கணிப்பு பராமரிப்பு, அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் ஸ்மார்ட் கண்காணிப்புத் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு தொடர்பான முக்கிய சவால்களுக்கும் இந்த அமர்வுகளில் விவாதிக்கப்படும்.

இக்கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக, சென்னை ஐஐடி உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாக உள்ளது. பிளம்பிங், நீர் மற்றும் சுகாதாரத் துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் தொழில்துறை – கல்வித்துறை இடையேயான கூட்டிணைப்பை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், இந்திய பிளம்பிங் சங்கம் தொழில்துறைக்கு மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “கட்டமைக்கப்பட்ட சூழலில் நீர் மற்றும் சுகாதாரம்: கருத்துருக்கள், அமைப்புகள் மற்றும் சேவைகள் திட்டமிடல்” (Water & Sanitation in the Built Environment: Concepts, Systems & Services Planning) என்ற நெறிமுறை நூலையும் வெளியிட உள்ளது. அத்துடன், பிளம்பிங் துறையில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட “சிறந்த பிளம்பிங் நடைமுறைகளுக்கான வழிகாட்டி” (A Guide to Good Plumbing Practices – AGGPP) என்ற நூல் தமிழில் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம், பிளம்பிங் தொடர்பான அத்தியாவசிய அறிவையும் சிறந்த நடைமுறைகளையும் அந்தந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பங்குதாரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் எளிதில் அணுகும் வகையில் கொண்டு சேர்க்கும்.

“சென்னை நகரம் இரு வேறு முரண்பட்ட பருவநிலைகளைக் கண்டுள்ளது – ஒருபுறம் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம், மறுபுறம் கடுமையான தண்ணீர் பஞ்சம். ஒரு வருடம் முழுவதும் நீரால் தத்தளிக்கும் ஒரு நகரம், அடுத்த வருடம் ஒவ்வொரு துளி நீருக்கும் போராடுவது? இது வெறும் தண்ணீர் நெருக்கடி அல்ல; நமது நீர் உட்கட்டமைப்பை நாம் எவ்வாறு வடிவமைக்கிறோம், நிர்வகிக்கிறோம் மற்றும் பராமரிக்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்வதற்கான ஓர் எச்சரிக்கை மணியாகும். இதற்கான தீர்வுகள் நம்மிடம் உள்ளன. தொழில்நுட்பமும் உள்ளது. இப்போது நமக்குத் தேவையானது கூட்டு முயற்சியும் தீர்க்கமான நடவடிக்கையும் மட்டுமே. வெறும் விவாதங்களோடு நின்றுவிடாமல், தீர்வுகளைச் செயலாக மாற்ற முன்வர வேண்டும் என கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறைத் தலைவர்கள், பொறியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்திய பிளம்பிங் சங்கம் சார்பாக அழைப்பு விடுக்கிறோம். நமக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்பது நீர்ப் பாதுகாப்பின் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது; மாறாக, ஒவ்வொரு துளியையும் நாம் எவ்வளவு பொறுப்புடன் நிர்வகிக்கிறோம் என்பதே அதைத் தீர்மானிக்கும்” என்று இந்திய பிளம்பிங் சங்கத்தின் (IPA) தேசியத் தலைவர் திரு. குர்மித் சிங் அரோரா தெரிவித்தார்.

“தொழில்துறை வல்லுநர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்கமான தீர்வுகளை ஆராயவும், வணிக ரீதியான கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் இந்த 32-வது இந்திய பிளம்பிங் கருத்தரங்கு ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கும். நீர், பிளம்பிங் மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த முக்கியப் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, தொழில்துறையின் மிக முக்கியமான சவால்களைப் பற்றி விவாதிக்க இது உதவும். 32-வது இந்திய பிளம்பிங் கருத்தரங்கிற்காக சென்னை வரும் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்று IPA சென்னை கிளையின் தலைவர் டாக்டர். எஸ். வீரப்பன் கூறினார்.

இதோடு மட்டுமின்றி, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள 16 கிளைகளில் ‘இந்திய பிளம்பிங் புரொபஷனல் லீக் 2026’ (IPPL) போட்டியை இந்திய பிளம்பிங் சங்கம் நடத்தியுள்ளது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) சான்றிதழுடன் இணைந்து நடத்தப்பட்ட 10-வது IPPL பதிப்பில், 600-க்கும் மேற்பட்ட கட்டிடத் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு NSDC மற்றும் IPA இணைந்து வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு கிளையிலும் வெற்றி பெற்றவர்கள், 32-வது கருத்தரங்கின் இறுதி நாளான டிசம்பர் 19 அன்று நடைபெறும் IPPL மாபெரும் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பல்வேறு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.