திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகில் 4 வணிக வளாகக் கட்டடங்கள் கட்டும் திட்டத்திற்கு ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் (CMRL) இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் அருகில் 446.88 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வணிக வளாகக் கட்டடங்களைக் கட்டும் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் (மாதவரம் – சோழிங்கநல்லூர்) 3.85 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கியச் சிறப்பம்சமாக, மெட்ரோ இரயில் பாதை நேரடியாகக் கட்டடத்தின் ஊடே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நிலையமும் இந்த வணிக வளாகத்திற்குள்ளேயே இடம்பெறவுள்ளது. இதன் மூலம் பயணிகள் வளாகத்திற்குள்ளிருந்தவாறே நேரடியாக மெட்ரோ இரயிலைப் பிடிக்க முடியும்.
இந்தத் திட்டத்திற்காக ‘கபாசிட்டி இன்ஃப்ராபிராஜெக்ட்ஸ்’ (Capacite Infraprojects Ltd) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சிவில் பணிகள், கட்டடக்கலை வேலைகள், மின் மற்றும் இயந்திரவியல் அமைப்புகள் போன்ற அனைத்துப் பணிகளும் தொடங்கி 24 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு கட்டடங்களும் வெவ்வேறு தள அமைப்புகளைக் கொண்டுள்ளன. அதன்படி டவர் ஏ மற்றும் டவர் சி ஆகியவை தலா மூன்று அடித்தளங்கள், தரை மற்றும் ஒன்பது மேல் தளங்களையும், டவர் பி தரை மற்றும் ஒன்பது மேல் தளங்களையும், டவர் டி தரை மற்றும் இரண்டு மேல் தளங்களையும் கொண்டிருக்கும்.
பொதுப் போக்குவரத்து வசதிகளுடன் வணிக வளாகங்களை இணைக்கும் ‘போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத்’ (TOD) திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பயணிகள் ஒரே வளாகத்தில் வேலை செய்தல், ஷாப்பிங் செய்தல் மற்றும் பயணம் செய்தல் போன்ற வசதிகளைப் பெற முடியும்.
