அரிசி தட்டுப்பாட்டை தவிர்க்க ‘தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி (இருப்பு வரம்பு) கட்டுப்பாட்டு ஆணை, 2026’ வெளியீடு!
தமிழகத்தில் நெல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்த்து, நியாயமான விலையில் சீரான விநியோகத்தை பொதுமக்களுக்கு உறுதி செய்யும் வகையில் ‘தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி (இருப்பு வரம்பு) கட்டுப்பாட்டு ஆணை, 2026’ வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி. அமுதா வெளியிட்டுள்ள இந்த அரசாணை (G.O.Ms.No.93) உடனடியாக அமலுக்கு வந்துள்ளதுடன், வரும் 2027 ஜனவரி 31 வரை மாநிலம் முழுவதும் முழுமையாக நடைமுறையில் இருக்கும்.
இதன்படி மொத்த விற்பனையாளர்கள் (Wholesaler) அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் நெல் அல்லது அரிசி மட்டுமே இருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையாளர்கள் (Retailer) மற்றும் பெரிய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை நிலையங்கள் (Big Chain retail shop) ஆகியவை ஒவ்வொரு கடையிலும் அதிகபட்சமாக 8 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். ஆலை உரிமையாளர்கள் (Miller) தங்களின் ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு மிகாமல் இருப்பு வைத்திருக்க வேண்டும். இறக்குமதியாளர்கள் (Importer) சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு இறக்குமதி இருப்பு வைத்திருக்கக் கூடாது. செயலிகள் (Processor) தங்களின் மாத நிறுவப்பட்ட திறனில் (MIC) 60 சதவீதத்தை, ஜனவரி 2027 வரை உள்ள மீதமுள்ள மாதங்களின் எண்ணிக்கையால் பெருக்கி வரும் அளவுக்கு மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட வரம்பைக் காட்டிலும் கூடுதல் இருப்பு வைத்துள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நுகர்வோர் விவகாரத் துறை இணையதளத்தில் (fcainfoweb.nic.in/psp) தங்களது இருப்பு நிலையைத் தவறாமல் அறிவிக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ள இருப்பை வரும் நவம்பர் 16, 2026-க்குள் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும், தொடர்ந்து இணையதளத்தில் இருப்பு விவரங்களைப் புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
