Tamilசினிமா

நாடகம் முதல் ஸ்டாண்ட்-அப் காமெடி வரை – சென்னையின் படைப்புலகப் பயணத்தைப் பகிர்ந்து கொண்ட கார்த்திக்குமார்

கலை, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலுக்குப் பெயர் பெற்ற சென்னையின் தனித்துவத்தையும், பல்வேறு கலைத்துறைகளில் தனது பயணத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார் நடிகரும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞருமான கார்த்திக்குமார். சூப்பர் சென்னை சார்பில் நடைபெற்ற ‘சூப்பர் சென்னை அரட்டை’ நிகழ்ச்சியின் சிறப்புப் பதிப்பில் பங்கேற்ற அவருக்கு, ‘சாம்பியன் ஆஃப் சென்னை’விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. CREDAI சென்னை அமைப்பின் செயலாளரும், வூரா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான சுமன் வூரா இந்த விருதை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கார்த்திக்குமார், நாடகம், திரைப்படம் மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி என வெவ்வேறு கலை வடிவங்களில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புதிய முயற்சிகளை வரவேற்கும் சென்னையின் கலாச்சாரச் சூழல், வளர்ந்து வரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு மற்றும் வழக்கமான கலை வடிவங்களுக்கு அப்பால் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினார். மேலும், நகைச்சுவை என்பது வெறும் சிரிப்பையும் பொழுதுபோக்கையும் வழங்குவதோடு நின்றுவிடாமல், சமூகத்தின் எதார்த்தங்களை எடுத்துரைக்கவும், மக்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பிரதிபலிக்கவும் உதவும் ஒரு வலிமையான ஊடகம் என்றும் குறிப்பிட்டார்.

நடிகரும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞருமான கார்த்திக்குமார் பேசுகையில்,“புதிய சிந்தனைகளையும் முயற்சிகளையும் எப்போதும் வரவேற்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. உடனடியாக வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்போ அழுத்தமோ இல்லாமல், ஒருவர் தனது திறமையை வெளிப்படுத்தவும், புதிய முயற்சிகளில் ஈடுபடவும் இங்கு வாய்ப்புள்ளது. ஒரு கலைஞர் சொல்வதைக் கேட்டு, அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் பார்வையாளர்கள் சென்னையின் மிகப்பெரிய பலம்.

சினிமா, சுயாதீன இசை, நடனம், டிஜிட்டல் தளங்கள், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அபாரமான திறமைகளைக் கொண்ட கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் பலரது படைப்புகள் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. புதிய கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, புதுமையான கலை முயற்சிகளுக்கு ஆதரவளித்தால், சென்னை இன்னும் பெரிய படைப்பாற்றல் மையமாக உருவெடுக்கும். புதியவற்றை ஏற்றுக்கொள்ளும் இந்தத் திறந்த மனப்பான்மையே சென்னையின் மிகப்பெரிய சிறப்பு. அதை நாம் தொடர்ந்து கொண்டாட வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற உரையாடலில், கலைத்துறையில் வழக்கமான பாதைகளைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு சென்னையின் சூழல் எவ்வாறு துணையாக இருந்தது என்பதையும் கார்த்திக் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, ஒரு புதிய கலை வடிவத்தையோ சிந்தனையையோ உடனடியாக நிராகரிக்காமல், அதற்குச் செவிசாய்க்கும் சென்னையின் பார்வையாளர்களைப் பாராட்டினார். வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களையும் சமூகத்தில் நிலவும் எதார்த்தங்களையும் நகைச்சுவையின் மூலம் எளிதாகப் பேச முடியும் என்றும், எதிர்பாராத வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்வதற்கும் நகைச்சுவை ஒரு சிறந்த வழியாக அமைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் உருவாகி வரும் இளம் கலைஞர்களின் திறமைகள் பரவலான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சூப்பர் சென்னை சார்பில் ரஞ்சீத் ரத்தோட் கூறுகையில்,“சென்னையின் பெருமை அதன் பாரம்பரியத்திலும் சாதனைகளிலும் மட்டுமல்ல, புதிய சிந்தனைகளை வரவேற்று, திறமையாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அடங்கியுள்ளது. நாடகம், திரைப்படம், ஸ்டாண்ட்-அப் காமெடி எனப் பல்வேறு தளங்களில் கார்த்திக்குமார் மேற்கொண்டுள்ள பயணம் இதற்குச் சிறந்த உதாரணம். வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளுக்கும் புதிய படைப்பாற்றல் முயற்சிகளுக்கும் சென்னை எப்போதும் இடமளித்து வந்துள்ளது. ‘சூப்பர் சென்னை அரட்டை’ நிகழ்ச்சியின் வாயிலாக, நகரத்தின் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் செழுமைப்படுத்தி வரும் இத்தகைய ஆளுமைகளின் அனுபவங்களையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கம். சென்னையின் உண்மையான பலம் அதன் மக்கள் தான் என்பதை இந்நிகழ்ச்சி தொடர்ந்து எடுத்துரைக்கும்,” என்றார்.

CREDAI சென்னை அமைப்பின் செயலாளரும், வூரா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான சுமன் வூரா கூறுகையில், “சென்னையின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் வளப்படுத்துவதில் பங்களிக்கும் ஆளுமைகளைக் கௌரவிப்பது பெருமைக்குரிய விஷயம். படைப்பாற்றல், துணிச்சல் மற்றும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றின் அடையாளமாக கார்த்திக்குமாரின் பயணம் அமைந்துள்ளது. அவரது பங்களிப்பைப் பாராட்டி ‘சாம்பியன் ஆஃப் சென்னை’ விருது வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.