Tamilசெய்திகள்

மதுரையில் நகைக்கடை கொள்ளை! – இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உள்பட இருவர் கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி மற்றும் யூடியூபர் நிஷாந்தின் தந்தை சுரேஷ் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நகைக்கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்றுவந்த நிலையில், இரண்டாம் தளம் காலியாகவும், மூன்றாம் தளத்தில் லாக்கர்களைப் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன. அப்போது கட்டிடத்தில் மின்தூக்கி பொருத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதால், கட்டிடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சாரத்தின் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்து நுழைந்த கும்பல், லாக்கர்களை உடைத்துச் சுமார் 15 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் குறித்துத் துப்பு துலக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரமுகரான மீனாட்சி உள்ளிட்ட இருவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், யூடியூபர் நிஷாந்தின் தந்தை சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 5 கிலோ தங்க நகைகளை வெற்றிகரமாக மீட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.