மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளான பாரத ஸ்டேட் வங்கி!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கும் தரவு கசிவிற்கும் உள்ளாகியுள்ளது. இந்தத் தாக்குதலின் மூலம் ஹேக்கர்கள் 3,75,000-க்கும் மேற்பட்ட வங்கிப் பதிவுகளைத் திருடியுள்ளனர். மேலும், 4,280 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களும் இதில் திருடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் பெயர்கள், வங்கிக் கணக்கு எண்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை தரவுகள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளதாகத் தெரிகிறது.
திருடப்பட்ட இந்த ரகசியத் தரவுகள் டார்க் வெப் (Dark Web) எனப்படும் இருண்ட இணையதளங்களில் விற்பனைக்கு வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குப் பரிவர்த்தனைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் கடவுச்சொற்களை (Passwords) உடனடியாக மாற்றுவது பாதுகாப்பானது. அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைத் தவிர்க்க வேண்டும்.
வங்கிக் கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
