இணையவழித் தாக்குதல் மூலம் திருடப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் தரவுகள்!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான சுமார் 3.75 லட்சம் தரவுகள் இணையவழித் தாக்குதல் மூலம் திருடப்பட்டு ‘டார்க் வெப்’ (Dark Web) தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சிரியூசிம்’ (Syruchim) என்ற ஹேக்கர் குழுவால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள், பிறந்த தேதிகள், பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கடன் விண்ணப்ப ஆவணங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் கசிந்திருப்பதை எஸ்பிஐ வங்கி தரப்பும் உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இந்தச் சைபர் தாக்குதலால் வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகளுக்கோ அல்லது வாடிக்கையாளர்களின் நிதிப் பரிவர்த்தனைகளுக்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றும், நிலைமையைக் தீவிரமாகக் கண்காணித்துத் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வங்கி நிர்வாகம் பங்குச்சந்தைக்கு அளித்த அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
