Tamilசெய்திகள்

ஓட்டுநர் உரிமத்தை காலாவதியாவதற்கு 6 மாதங்கள் முன்னரே புதுப்பிக்க வேண்டுமாம்!

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்தது. போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தொகை ஏற்கனவே இருந்ததைவிட பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, அபராத தொகையை அந்தந்த மாநிலங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப செயல்படுத்தலாம் என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி அறிவித்தார். இந்த சட்ட திருத்தம் தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

இதில் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கும் நடைமுறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுனர் உரிமம் காலாவதியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு ரூ.100 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் ஒரு ஆண்டுக்கு ரூ.50 வீதம் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அபராதம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே சட்டத்தில் இருந்தது.

புதிய சட்டத்தில் 5 ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற காலஅவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓட்டுனர் உரிமம் காலாவதியாகி ஒரு ஆண்டுக்குள் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்குள் புதுப்பிக்காவிட்டால் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதுபோல மீண்டும் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பது தொடர்பான சட்ட திருத்தம் விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இது அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அபராத தொகை அதிகரித்திருப்பதை தமிழகத்தில் அமல்படுத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

அதேசமயம் ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பது தொடர்பான சட்ட திருத்தங்கள் தமிழகத்தில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும், இது இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *