அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை – இம்ரான் கான்
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கியதால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. அபிநந்தனை தாக்கக் கூடாது, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
அதன் பின்னர் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார். அதன்படி கடந்த 1ம் தேதி இரவு 9 மணியளவில், அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இம்ரான் கானின் இந்த நடவடிக்கையால் இரு நாடுகளிடையே நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. எனவே, அவருக்கு பாகிஸ்தான் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவன் அல்ல’ என பதிவிட்டுள்ளார்.
இந்த பரிசுக்கு தகுதியானவர், காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்து அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும் பாடுபடுபவரே ஆவார் என இம்ரான் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.